கர்நாடக முதல்வராக பொம்மை பதவியேற்பு| Dinamalar

கர்நாடக முதல்வராக பொம்மை பதவியேற்பு

Added : ஜூலை 28, 2021
Share
பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வராக, பசவராஜ் பொம்மை பதவியேற்றார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் 2019 ஜூலை 26ல், எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அந்த அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர் பதவியிலிருந்து,

பெங்களூரு: கர்நாடகாவின் புதிய முதல்வராக, பசவராஜ் பொம்மை பதவியேற்றார். கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

கர்நாடகாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களால் 2019 ஜூலை 26ல், எடியூரப்பா தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்தது. இரண்டு நாட்களுக்கு முன், அந்த அரசு, இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர் பதவியிலிருந்து, எடியூரப்பா, 78, விலகினார். புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க, பெங்களூரு தனியார் ஓட்டலில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.

அதில், உள்துறை அமைச்சராக இருந்த பசவராஜ் பொம்மை, 61, சட்டசபை பா.ஜ., குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவியேற்பு விழா நடந்தது. காலை 10:57 மணிக்கு முதல்வராக பசவராஜ் பொம்மை, கன்னட மொழியில், கடவுள் பெயரில் பதவியேற்று கொண்டார்.கவர்னர் தாவர்சந்த் கெலாட், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

காலை 11:00 மணிக்கு பதவியேற்பு விழா நடக்குமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே துவங்கி, 11:00 மணிக்கு விழாவே முடிந்துவிட்டது. புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் எடியூரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X