இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Added : ஜூலை 30, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:ரூ.2,500 கோடி ஹெராயின் கடத்தியவர் டில்லியில் கைதுஆமதாபாத்: பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தியவர், டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகித் கசம் சும்ரா, 35. போதை பொருள் கடத்தலில் கில்லாடி. கடத்தலில் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத
crime,arrest, police


இந்திய நிகழ்வுகள்:ரூ.2,500 கோடி ஹெராயின் கடத்தியவர் டில்லியில் கைது


ஆமதாபாத்: பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக 2,500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் கடத்தியவர், டில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகித் கசம் சும்ரா, 35. போதை பொருள் கடத்தலில் கில்லாடி. கடத்தலில் கிடைக்கும் பணத்தை பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து வந்தார்.பல்வேறு வழக்குகள் தொடர்பாக, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் ஷாகித்தை தேடி வந்தனர். இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து விமானத்தில் டில்லி வந்த ஷாகித்தை, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று கைது செய்தனர்.

கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலத்தில், 530 கிலோ ஹெராயின் போதை பவுடரை, பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக நான்கு முறை, குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு கடத்தி வந்துள்ளார்; அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதன் சர்வதேச மதிப்பு 2,500 கோடி ரூபாய் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் நாகாலாந்து கப்லாங் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் படையை சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை, போலீசார் நேற்று சுட்டுக் கொன்றனர்.

என்.எஸ்.சி.என்., எனப்படும், நாகாலாந்து கப்லாங் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் அருணாச்சல பிரதேசத்தின் கொட்டம் வன பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


தமிழக நிகழ்வுகள்:ரத்தம் சொட்ட சொட்ட லாரியை ஓட்டி தப்பிய டிரைவர்


சென்னை : புழல் அருகே, வட மாநில லாரி ஓட்டுனரை தாக்கிய மர்ம கும்பல், அவரிடம் இருந்து பணம் பறித்து சென்றது. இதில் படுகாயம் அடைந்த ஓட்டுனர், ரத்தக் காயத்துடன், 2 கி.மீ., லாரி ஓட்டிச் சென்று உயர் தப்பினார்.

சென்னை, புழல், ரெட்டேரி சந்திப்பு, நாகாத்தம்மன் கோவில் அருகே, ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் மகாவீர், 42, நேற்று முன்தினம் இரவு, லாரியை நிறுத்தி ஓய்வெடுத்தார்.நேற்று அதிகாலை 4:15 மணி அளவில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், அவரிடம் பணம் பறிக்க முயன்றனர். மகாவீர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவர்கள் கையில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் மகாவீரை வெட்டினர்.

மகாவீரின் இரு கைகளிலும் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. இதை யடுத்து, அவரிடம் இருந்து 8,500 ரூபாயை வழிப் பறி கும்பலை சேர்ந்தோர் பறித்தனர்.அங்கு தனக்கு உதவ யாரும் இல்லாததால், கையில் ஏற்பட்ட படுகாயத்துடன் சம்பவ இடத்தில் இருந்து, 2 கி.மீ., துாரம், துணிச்சலாக லாரியை ஓட்டி சென்றார்.

மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள, பெட்ரோல் 'பங்க்'கில் லாரியை நிறுத்தி, தனக்கு ஏற்பட்ட கொடுமையை கூறும்போதே, அதிக ரத்தபோக்கு காரணமாக மயங்கிவிழுந்தார். அங்கிருந்தவர்கள், மாதவரம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


latest tamil news'இன்ஸ்டாகிராமில்' மிரட்டல்: வாலிபருக்கு 'போக்சோ'


திருமுல்லைவாயில்: சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவியிடம், 'இன்ஸ்டாகிராமில்' ஆபாச படம் கேட்டு மிரட்டிய, திருச்சியைச் சேர்ந்த வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், மேல சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 21. இவரும், இவரது நண்பர் அசாருதீன் என்பவரும் சென்னையைச் சேர்ந்த 9ம் வகுப்பு சிறுமியின் சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம்' படங்களுக்கு 'லைக்' கொடுத்து, அவருடன் நெருக்கமாக பழகினர்.
இந்நிலையில், சிறுமியின் ஆபாச படங்களை அனுப்பும்படி, சிறுமிக்கு மிரட்டல் விடுத்தனர். சிறுமி, இது குறித்து, பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், கண்ணன், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தலைமறைவாகியுள்ள அசாருதீனை தேடி வருகின்றனர்.


ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தீ


ராமநாதபுரம், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் சேதமாகின. முறைகேடுகளை அழிக்க மர்மநபர்கள் தீ வைத்தனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தடை செய்யப்பட்ட சிகரெட்கள் பறிமுதல்


மதுரை : மதுரை இஸ்மாயில்புரம் ஆறாவது தெருவில் மிட்டாய் குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது.அங்கு சென்று பார்த்தபோது, தடை செய்யப்பட்ட இந்தியா புகையிலை நிறுவனத்தின் - ஐ.டி.சி., - அங்கீகாரம் இல்லாத சிகரெட்டுகள் பண்டல் பண்டலாக டன் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, மினி சரக்கு வாகனங்களில் விளக்குத்துாண் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர். இரவு வரை எத்தனை டன் என கணக்கு எடுத்துக் கொண்டிருந்தனர். குடோன் உரிமையாளர் பன்னீர்செல்வம் தலைமறைவானார்.


பாட்டி கொலை: பேரன் கைது


நாகப்பட்டினம் : குடும்ப பிரச்னையில், பாட்டியை அடித்து கொலை செய்த பேரனை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், கரியாப்பட்டினம் அடுத்த நாகக்குடையானைச் சேர்ந்தவர் செல்வராஜ், 68; விவசாயி. இவரது மனைவி காந்திமதி, 65. அருகே செல்வராஜின் மகள் ராணி வசித்து வருகிறார். ராணியின் மகன் ரஞ்சித்குமார், 24 அடிக்கடி மது போதையில் தாத்தா செல்வராஜ் வீட்டிற்கு சென்று, குடும்ப சொத்தை பிரித்துத் தரும்படி கேட்டு தகராறில் ஈடுபடுவார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் தாத்தா வீட்டிற்கு வந்த ரஞ்சித்குமார், செல்வராஜிடம் வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளார். கணவரை தாக்குவதை காந்திமதி தடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ரஞ்சித், காந்திமதியை கடுமையாக தாக்கி, கீழே தள்ளியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே காந்திமதி இறந்தார். செல்வராஜ் புகாரில், கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.


உலக நிகழ்வுகள்:ஆப்கனில் வெள்ளம் 150 பேர் உயிரிழப்பு


காபூல் : ஆப்கானிஸ்தானின் வடமேற்கு மாகாணமான நூரிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி, 150 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த, 150 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.நூரிஸ்தான் மாகாணத்தில் பெரும்பகுதியை தலிபான்கள் கைப்பற்றி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கும்படி தலிபான் அமைப்பினரிடம், ஆப்கன் அரசு வலியுறுத்தி உள்ளது.


13 பேர் கொலை; இருவர் கைது


லாகூர் : பாகிஸ்தானின்கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள தாசு என்ற பகுதியில் சீன நிறுவனம் மின் உற்பத்தி மையம் அமைத்து வருகிறது. இதில் பணியாற்றிய ஒன்பது சீன பொறியாளர்கள் உட்பட 13 பேர் சென்ற பஸ், வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இது தொடர்பாக பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பாக்., அரசு தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X