சென்னை: கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, பொது மக்களிடம் பணம் வசூல் செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை போலீசார் முளையிலேயே கிள்ளி எறிவது போல நடவடிக்கை எடுத்துள்ளனர். குறைந்த முதலீட்டில், அதிக லாபம் என்ற விளம்பங்களை நம்பி, மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பத்திரிகை ஒன்றில், ஜூலை, 18 ஞாயிறன்று, Rafoll Retails(opc) pvt. Ltd., Eggmart என்ற நிறுவனம் சார்பில், வினோதமான விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது. அந்த விளம்பரத்தில், ஒரு முட்டையின் விலை, 2 ரூபாய், 24 பைசா மட்டுமே. எங்கள் நிறுவனத்தில், 700 ரூபாய் முதலீடு செய்தால், 6 முட்டைகள்; 1,400 ரூபாய் முதலீடு செய்தால், 12 முட்டைகள்; 2,800 ரூபாய் முதலீடு செய்தால், 24 முட்டைகள் வாரம் தோறும் தருவோம்.
இத்திட்டங்களின்படி, ஓராண்டுக்கான முட்டைகள், உங்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து தருவோம். இச்சலுகை முதலில் பதிவு செய்யும், 5 லட்சம் பேருக்கு மட்டுமே என, அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிறுவனத்தின் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், 'அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க, ஜூலை, 20ல், கிண்டியில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும்' என, அந்த நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, அந்த நிறுவனத்தின் நிறுவனர் சிவம் நரேந்திரன் ஆஜரானார்.

அப்போது, அந்நிறுவனம் சார்பில், பொது மக்களிடம் இருந்து, முன் பணம் பெறுவதற்கான ஆவணங்கள்; அந்நிறுவனத்தை நடத்துவதற்குரிய முறையான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை; எங்களிடம் காட்டவும் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது, 'எங்கள் நிறுவனத்தை மேற்கொண்டு நடத்தவில்லை. விளம்பரத்தை பார்த்து, ஆன்லைன் வாயிலாக பணம் கட்டியவர்களுக்கு, அதே முறையில் திருப்பி அனுப்பி விடுகிறோம். எங்கள் நிறுவனத்தின் பெயரில் இயங்கும் ஆன்லைனை முடக்கி விடுகிறோம்' என்றும் தெரிவித்தார்.
அதன்படி செய்துவிட்டார். கவர்ச்சிகரமான திட்டங்கள் வாயிலாக, 'குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவோம்' என, இதுபோன்று வெளியிடப்படும் போலி விளம்பரங்களை நம்பி, பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.