சென்னை : ''மீனவர்களுக்காக அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனில், முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மீனவர்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமிழக பா.ஜ., சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:விவசாயிகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல மீனவர்களும் முக்கியம். ஆழ்கடலுக்கு சென்று, நமக்காக மீன் பிடித்து வருகின்றனர். அவர்களின் பிரச்னைக்காக, பா.ஜ., குரல் கொடுக்கிறது. மீன்பிடி தடை காலத்தில், 5,000ம் ஆக உள்ள நிவாரண தொகை, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை நிவாரண தொகை உயர்த்தப்படவில்லை. டீசல் மானியம் அதிகரித்து வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப் பட்டது. வாக்குறுதி என்பது குறித்த காலத்திற்குள் கிடைப்பதற்காக அறிவிப்பது; அரசியலில் ஜெயித்து, ஒரு குடும்பம் ஆட்சி அமைப்பதற்காக கிடையாது. மீனவ சமூகத்தினரை ஏமாற்றியதை தட்டிக் கேட்கவே, நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியின் போது, 464 மீனவ நண்பர்கள் இலங்கை கடற்படை தாக்குதல், துப்பாக்கிச் சூடு போன்றவற்றால் உயிரிழந்தனர். ஆனால், மோடியின் ஆட்சி காலத்தில், ஒரு மீனவர் கூட சுடப்பட்டதில்லை. மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று தைரியமாக மீன் பிடிக்க முடிகிறது. அதற்கு காரணம் நம் பிரதமர் மோடிதான்.மீனவர்களின் பாதுகாவலனாக இருப்பது மோடி மட்டுமே. மீனவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க., அரசு உடனே நிறைவேற்றவில்லை என்றால், முதல்வர் ஸ்டாலின் வீட்டு முன் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநில நிர்வாகிகள் வி.பி. துரைசாமி, வினோஜ் செல்வம், பால்கனகராஜ், சதீஷ்குமார் உட்பட,ஏராளமானோர் பங்கேற்றனர். அண்ணாமலை முன்னிலையில், திருவள்ளூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் குமரன் தலைமையில், 200 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். அண்ணாமலைக்கு வலையால் செய்யப்பட்ட மாலையும், சிறிய படகும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE