புதுடில்லி : 'பி.,எம்., கேர்ஸ் திட்டத்தில் நிதியுதவி பெற, 292 குழந்தைகளின் பெயர்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக, 'பி.எம்., - கேர்ஸ்' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி அறிவித்தார். பெற்றோரை இழந்த ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த திட்டத்தின் கீழ், 10 லட்ச ரூபாய் ஒதுக்கி, இலவச உறைவிடக் கல்வி உள்ளிட்டவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பார்லிமென்டில் கூறியதாவது: கொரோனா தொற்றுக்கு ஏப்., - மே மாதம் வரை, 645 குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளின் விபரங்களை, இணையதளத்தில் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
பி.எம்.கேர்ஸ் திட்டத்தில் உதவி பெற, 29ம் தேதி வரை 292 குழந்தைகளின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 112 குழந்தைகளும் இதில் அடங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE