சென்னை : -காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது என்ற கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
'மத்திய நீர் வளத்துறை அமைச்சர், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக்கூடாது. ஒரே கட்சியாக இருந்தாலும், கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து, ஆக., 5ல், தஞ்சாவூரில், என் தலைமையில், தமிழக பா.ஜ., விவசாய அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்' என, அண்ணாமலை அறிவித்துள்ளார்.

'மேகதாது அணையை கட்ட, கர்நாடக அரசு ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது' என்றும் கூறியுள்ளார். இந்த அதிரடி அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடகம் நடத்துகிறார்
இதுகுறித்து, காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் கூறியதாவது: போகாத ஊருக்கு அண்ணாலை வழி கூறுகிறார். காவிரி பிரச்னையில், தமிழக தலைவராக நீங்கள் என்ன செய்தீர்கள் என, எதிர்காலத்தில் யாரும் கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, நாடகம் நடத்துகிறார்.கர்நாடக முதல்வர் பொம்மையின் வீடு அல்லது பிரதமர் மோடி அலுவலகம் முன்தான் போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து, தஞ்சையில் போராட்டம் நடத்தினால், அதனால் என்ன விளையப் போகிறது?

காங்., அரசு கர்நாடகாவில் இருந்த போதும், இதே போன்ற பிரச்னைகள் தமிழக காங்கிரசுக்கும் இருந்தன. அப்போது, தமிழக அரசுக்கு தமிழக காங்., உறுதுணையாக இருந்ததே தவிர, இப்படி நாடகம் நடத்தவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
'இரட்டை வேடம் போடுகிறார்'
மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் கூறியதாவது: காவிரி பிரச்னையில், பிரதமர் மோடி, ஜல் சக்தி அமைச்சகத்தை தான், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் அணுக வேண்டும். அதை விடுத்து, தெளிந்த பார்வையின்றி அண்ணாலை போராட்டம் அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் இருந்தால் கன்னடன்; தமிழக பா.ஜ., தலைவரானதும் தமிழன் என்று இரட்டை வேடம் போடுகிறார். இதற்கு பதில், கர்நாடகாவுக்கு சென்று, அங்கு உள்ளவர்களிடம் பேசி தமிழக உரிமைகளை பெற்று வரலாமே. இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க., உரிமை கொண்டாட வரும்
'பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாவது: காங்கிரஸ், - கம்யூ., கட்சிகளை போல, மாநிலத்துக்கு மாநிலம் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்து, அந்தந்த மாநிலங்களுடன் பேசி வைத்து கொண்டு, நாடகம் போடும் முறை பா.ஜ.,வில் கிடையாது.

தி.மு.க., கூட்டணி கட்சியினர் போல, அடுத்தவர் போராடி பெறும் உரிமைகள், வெற்றிகளுக்கு தாங்கள் சொந்தம் கொண்டாடுவது போன்ற வேலைகளை பா.ஜ., என்றைக்கும் செய்யாது. காவிரி பிரச்னையில், பா.ஜ., போராடி பெற்று தரும் வெற்றிகளுக்கு கூட, தி.மு.க., உரிமை கொண்டாட வரும் பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE