திருநெல்வேலி: நேர்மையாக பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை இடமாற்றியும், சஸ்பெண்ட் செய்தும் ஹிந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக சான்றிதழ் வழங்கியதற்காக ஐகோர்ட் கண்டித்த ஒரு அதிகாரியை மீண்டும் வள்ளியூரில் பணியமர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகாரி மாற்றம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயில் செயல் அலுவலராக இருந்தவர் சுபாஷினி. வள்ளியூர், திசையன்விளை பகுதியில் ஹிந்து அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் செயல்பட்ட தனியார் கனிம நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு நிலத்தை மீட்டார். சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுபாஷினி தென்காசி மாவட்டம் நவநீதகிருஷ்ணசாமி கோயிலுக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக புதுக்கோட்டை கீரனுார் பகவதியம்மன் கோயிலில் பணியாற்றிய வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூலை 14ல் இடமாற்றம் கோரியதாகவும் உடனடியாக மாற்றப்படுவதாகவும் மாற்றல் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வேலுச்சாமி ஏற்கனவே 2009ல் வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பணியாற்றினார்.
கோர்ட் கண்டித்தவர் நியமனம்
அப்போது மீனாட்சியம்மாள் என்பவர் 1919ல் கோயிலுக்கு எழுதி வைத்த நிலத்தை அவரது தரப்பிடம் இருந்து ஜெபமணி என்ற கிறிஸ்தவர் வாங்கியிருந்தார். ஜெபமணியும், மகன் வேதசிங்கும் தங்களை கோயில் அக்தார் என அறிவிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ''ஒரு கிறிஸ்தவர் ஹிந்து அறநிலையத்துறை கோயிலுக்கு அக்தார் ஆக முடியாது. ஆனால் அவர்கள் அக்தார் ஆகலாம் என கோயில் செயல் அலுவலர் வேலுச்சாமி தடையின்மை சான்றிதழ் வழங்கியுள்ளார். கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டியவர் தனது பதவிக்கு உகந்ததாக நடந்து கொள்ளவில்லை'' என தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார்.
ஐகோர்ட் உத்தரவிற்கு பிறகு அந்த நிலம் மீட்கப்பட்டது. வேலுச்சாமி வடமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார். தற்போது தி.மு.க., ஆட்சி வந்ததும் விருப்ப மாறுதல் கேட்டு 10 நாட்களில் விரும்பிய இடத்திற்கு பொறுப்புக்கு வந்துள்ளார். நேர்மையான பெண் அதிகாரி சுபாஷினி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேர்மை அதிகாரி சஸ்பெண்ட்
இதேபோல் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. திருச்செந்துாரில் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பாத்தியப்பட்ட கேரள லாட்ஜை தனியார் சிலர் வாடகைக்கு விட்டு சம்பாதித்தனர். பொதுநல வழக்கு மூலம் லாட்ஜை மீட்க கோர்ட் உத்தரவிட்டது. முப்பந்தல் இசக்கியம்மன் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள லாட்ஜை கோயிலின் செயல்அலுவலர் அஜீத் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு மீட்டார். அதன் வருமானம் கோயிலுக்கு வருகிறது.

இந்நிலையில் நேற்று அஜீத் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உயரதிகாரிகள், கட்சியினரின் சுயநலனுக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் பந்தாடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரங்கள் முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு தெரியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE