போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் வேளாண் துறையில் ரின்கேஷ் என்ற 30 வயது ஊழியர் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று பதிவு செய்தார். அவர் தனது மனுவில் தெரிவித்து உள்ளதாவது:

ஜபல்பூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் நான் பணிபுரிந்து வருகிறேன். அங்கு 50 வயதுடைய கோகிலா என்ற பெண் ஒப்பந்த ஊழியராக உள்ளார். கடந்த ஜூன் 16ம் தேதி அவர் என்னை மிரட்டி காரில் கடத்தி சென்றார். அவருக்கு உதவியாக 3 பேர் இருந்தனர். கோல்காபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்தனர். அங்கு எனக்கு மயக்க மருந்து கொடுத்தனர். கோவிலுக்கு அழைத்து சென்றனர். பெண் என்னை கத்தியை காட்டி மிரட்டி தாலி கட்டாவிட்டால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். பயத்தில் அந்த பெண்ணுக்கு தாலி கட்டினேன்.

ஜூன் 17ம் தேதி அந்த பெண் தூங்கி கொண்டிருந்த போது நான் தப்பி வந்து விட்டேன். ஜபல்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தேன். கடத்தலுக்கான ஆதாரம் கேட்டார். ஜபல்பூர் போலீஸ் நிலையம் முன்புதான் நான் கடத்தப்பட்டேன். எனவே அந்த காவல்நிலைய கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்யும் படி கூறினேன். ஆனால் காட்சிகள் அழிக்கப்பட்டு இருந்தன. எனவே அந்த பெண்ணிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி இதுதொடர்பாக விளக்கம் அளிக்கும்படி ஜபல்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு உள்ளார்.