பொது செய்தி

தமிழ்நாடு

முக்கிய கோவில்களில் 3 நாளுக்கு தரிசனம் ரத்து: கொரோனா பரவுவதால் அரசு நடவடிக்கை

Updated : ஆக 01, 2021 | Added : ஜூலை 31, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதால், முக்கிய கோவில்களில், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் வருகைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில், பொது மக்கள் அதிகம் கூடும், 10 இடங்களில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், 21 மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை
முக்கிய கோவில்கள், தரிசனம், ரத்து,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல், மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதால், முக்கிய கோவில்களில், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் வருகைக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில், பொது மக்கள் அதிகம் கூடும், 10 இடங்களில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும், 21 மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, அரசு தரப்பில் கடும் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், சில தினங்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. தினசரி தொற்று 2,000த்தை நெருங்குகிறது. இதே நிலை நீடித்தால், மீண்டும் மருத்துவ நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.


விழிப்புணர்வு பிரசாரம்

எனவே, அரசு ஆரம்பத்திலேயே அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு, தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்க வேண்டும். தொற்று குறையத் துவங்கியதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர்.முக கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது குறைந்துள்ளது.எனவே, கொரோனா தடுப்பு விதிமுறைகளை, மக்கள் பின்பற்றுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தற்போது, அரசு விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி உள்ளது.

விழிப்புணர்வு பிரசாரத்துடன், கெடுபிடியும் அவசியம். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாதவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தொற்று பரவல் மிகவும் அதிகமாக உள்ளது. அந்த மாநிலங்களில் இருந்து, தினமும் ஏராளமானோர் தமிழகம் வந்து செல்கின்றனர். இதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.

அங்கிருந்து வருவோருக்கு, கொரோனா பரிசோதனை நடத்தி முடிவு தெரியும் வரை, தனிமைப் படுத்த வேண்டும். தற்போது, அனைத்து கடைகளும் இரவு, 9:00 மணி வரை திறந்திருக்கின்றன. இவற்றை, ஒரு நாள் விட்டு ஒரு நாள் திறக்கும்படி செய்யலாம். அரசு விழாக்களில், ஏராளமானோர் குவிகின்றனர்; இதை தடுக்கலாம். 'மினி ஊரடங்கு' போல, சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆரம்பத்திலேயே கட்டுப்பாடுகளை விதித்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தினால், முழு ஊரடங்கை தவிர்க்கலாம். அரசின் முடிவுகளுக்கு, பொது மக்கள் ஒத்துழைப்பும் அவசியம்.

கொரோனா காரணமாக, கோவில் திருவிழாக்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பிரசித்தி பெற்ற கோவில்களில், ஆடிக் கிருத்திகை, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பெருக்கு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


நேர்த்திக் கடன்

சென்னையில், வடபழநி ஆண்டவர் கோவில், கந்தக்கோட்டை கந்தசாமி கோவில், சூளை அங்காள பரமேஸ்வரி கோவில், பாடி படவேட்டம்மன் கோவில், தேவிபாலியம்மன், இளங்காளியம்மன் கோவில் உட்பட, பல்வேறு முருகன் மற்றும் அம்மன் கோவில்களில், பக்தர்கள் நேர்த்திக் கடனாக, தீ மிதித்தல், காவடி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல் என, நேர்த்திக் கடன்களைநிறைவேற்றுவர்.

தற்போது தொற்று பரவல் அதிகரிப்பதால், கூட்டங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்று முதல், மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோவில்களில் ஆகம விதிகளின்படி, கால பூஜைகள் நடக்கும் என, அறநிலையத் துறை சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிபிரியா தெரிவித்துள்ளார்.


எதிர்பார்ப்பு

இதேபோல், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில், பிரசித்தி பெற்ற கோவில்களில், இரண்டு நாட்களுக்கு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர் உட்பட 21 மாவட்டங்களில், கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு முன், 120 வரை குறைந்திருந்த தினசரி தொற்று, தற்போது 200க்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால், கொரோனா மூன்றாம் அலை பரவல் துவங்கி விட்டதோ என்ற அச்சம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது.தொற்று பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதற்கேற்ப, மக்கள் அதிகம் கூடும் இடங்களைகண்டறிந்து, அப்பகுதியை மூட, மாநகராட்சிகள், காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, விதிமுறைகள் பின்பற்றப்படாத பகுதிகளில், கெடுபிடிகள் துவங்கி உள்ளன. சென்னையில், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர், தங்கள் துறை அதிகாரிகளுடன், கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய, 10 இடங்களில் செயல்படும், வணிக வளாகங்கள், அங்காடிகள், தெருவோர கடைகளை, வரும், 9ம் தேதி காலை, 6:00 மணி வரை மூட உத்தரவிட்டனர். இந்த உத்தரவு நேற்றே அமலுக்கு வந்தது. இதனால், சென்னை தி.நகர், பிராட்வே, அமைந்தகரை என, ஒன்பது பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தாம்பரம் பெரிய மார்க்கெட்டும் மூடப்பட்டது. பாரிமுனை, கொத்தவால் சாவடி மார்க்கெட், இன்று முதல் மூடப்படுவதால், பொருட்கள் வாங்க அப்பகுதியில், கூட்டம் அலைமோதியது.

மேலும், அண்டை மாநிலமான கேரளாவில், தினசரி தொற்று பரவல், அதிகமாக இருப்பதால், அந்த மாநில எல்லையில், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகளை, 'சீல்' வைப்பது குறித்தும், ஆலோசனை நடந்து வருகிறது.


மண்டல அலுவலர் முற்றுகை

இதற்கிடையில், சென்னையில், முன்னறிவிப்பின்றி கடைகள் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராயபுரம் மண்டல அலுவலர் தமிழ்செல்வனை, அப்பகுதி வியாபாரிகள் முற்றுகையிட்டனர். போலீசார் பேச்சு நடத்திய பின் கலைந்து சென்றனர்


.சென்னையில் தடை விதிக்கப்பட்ட தெரு, சாலைகள்

* ரங்கநாதன் தெரு சந்திப்பில், வடக்கு உஸ்மான் சாலை முதல், மாம்பலம் ரயில் நிலையம் வரை

* புரசைவாக்கம், டவுட்டன் சந்திப்பு முதல், புருக்லின் சாலை சந்திப்பு வரை

* ஜாம் பஜார், பாரதி கபே சந்திப்பு முதல், பெல்ஸ் சாலை சந்திப்பு வரை

* பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி.போஸ் சாலை, குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை\

* ராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல் மண்டபம் சாலை, 'வாட்டர் டேங்க்' முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை

* அமைந்தகரை மார்க்கெட் பகுதியில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை காவல் உதவி மையம் முதல், புல்லா அவென்யூ, திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை

* செங்குன்றம் மார்க்கெட் பகுதியில், ஆஞ்சநேயர் சிலை முதல், அம்பேத்கர் சிலை வரை

* பாரிமுனை, கொத்தவால் சாவடி மார்க்கெட் பகுதி முழுதும்

* தாம்பரம், சண்முகம் சாலை, அப்துல்ரசாக் சாலை, புது மார்கெட் பகுதி


மூன்றாவது அலையா?

மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது, 15 முதல், 21 மாவட்டங்களில், சற்று ஏற்றம் காண முடிகிறது. இந்த நேரத்தில்,அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.

நம்மால் மற்றவர்களுக்கு நோய் பரவக் கூடாது; மற்றவர்களிடம் இருந்து, நமக்கு நோய் வரக் கூடாது என்ற எண்ணத்தில், மூன்றாவது அலையை தடுப்பதற்கான உத்திகள் அனைத்தையும், குறும்படம் வழியாகவும், அறிக்கை வழியாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.கடை வீதிகள் உட்பட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

மூன்றாவது அலை வருமா, வராதா என, தனிப்பட்ட முறையில் கருத்து கூற முடியாது. பொது சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில், மத்திய - மாநில அரசுகள் கருத்து தெரிவிக்கும்.தமிழகத்தை பொறுத்தவரை, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில், 90 சதவீதம் 'டெல்டா வைரஸ்' இருந்தது கண்டறியப்பட்டது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களில், கூடுதலாக தடுப்பூசி செலுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத் துறை கண்காணித்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள், ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் கூடுதலாக்கப்பட்டுள்ளன.மத்திய அரசு தினசரி, 650 கிலோ லிட்டர்ஆக்சிஜன் ஒதுக்குகிறது. நமக்கு, 150 கி.லி., தான் தேவைப்படுகிறது.மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி உள்ளோம்.

மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என, வல்லுனர்கள் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. எனினும், 25 சதவீதம் ஆக்சிஜன் படுக்கைகள், குழந்தைகளுக்காக அமைக்கப்பட்டு வருகின்றன. பொது மக்கள் முக கவசம் அணிவதால், சமூக இடைவெளி கடைப்பிடிப்பதால் நோய் குறைந்தது. அதனால், நோய் இல்லை என்று அர்த்தம் இல்லை. எனவே, மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். நோய் அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X