சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

திருட்டுத்தனத்துக்கு திராவிட கட்சிகள் கூட்டணி!

Updated : ஆக 03, 2021 | Added : ஆக 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
காமெடி நடிகர் வடிவேலு போல, ''இதோ ஆரம்பிச்சுட்டோமுல்ல...'' என்றபடியே நாயர் கடைக்கு வந்தார், அந்தோணிசாமி.''என்ன விஷயம் வே...'' என கேட்டார் அண்ணாச்சி.''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், புழல், காவாங்கரை சுற்றுவட்டாரத்துல மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் வெட்டுறாங்க... அதுல கிடைக்கிற மணல் மற்றும் சவுடு மண்ணை மாநகராட்சி கிடங்குல சேகரிக்குறதா அதிகாரிகள்
டீ கடை பெஞ்ச்

காமெடி நடிகர் வடிவேலு போல, ''இதோ ஆரம்பிச்சுட்டோமுல்ல...'' என்றபடியே நாயர் கடைக்கு வந்தார், அந்தோணிசாமி.

''என்ன விஷயம் வே...'' என கேட்டார் அண்ணாச்சி.

''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மாதவரம், புழல், காவாங்கரை சுற்றுவட்டாரத்துல மழை நீர் வடிகால் பணிக்காக பள்ளம் வெட்டுறாங்க... அதுல கிடைக்கிற மணல் மற்றும் சவுடு மண்ணை மாநகராட்சி கிடங்குல சேகரிக்குறதா அதிகாரிகள் சொல்றாங்க...
''ஆனா, ஒரு லோடு மணல் 20 ஆயிரம் ரூபாய்; சவுடு மண் 5,000 ரூபாய்ன்னு தனியாருக்கு விற்குறாங்க...தினமும் 12 லோடு வரை போயிட்டு இருக்குதுங்க...''இந்த கொள்ளையில ஒரு லோடுக்கு, வடிகால் பணி மேற்பார்வையாளருக்கு 500, பகுதி செயலருக்கு 500, வட்டச் செயலருக்கு 1,000 ரூபாய்ன்னு, 'கட்டிங்' கொடுக்குறாங்க.எல்லாத்துக்கும் மூல காரணம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வின் தம்பி தானாமுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''நந்தகோபால், உம்ம அண்ணன் புண்ணியத்துல வெளிநாடு போறீர்... வாழ்த்துகள் ஓய்...'' எனக் கூறி வைத்தார்.

''நானும் ஒரு வசூல் தகவல் சொல்றேன் பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.

''ம்... சொல்லுங்க வே...'' என்றார் அண்ணாச்சி.

''திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டை சுத்தி அனுமதி இல்லாம, தள்ளுவண்டி டிபன் கடை, டீக்கடை, பூக்கடைன்னு 100க்கும் மேற்பட்ட தரைக் கடைகள் இருக்குது பா... கடந்த ஆட்சியில கடைக்கு தினமும், 75 ரூபாய் வீதம் அ.தி.மு.க.,வினர் மாமூல் வசூலிச்சாங்க பா...

''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், தொகுதி எம்.எல்.ஏ., மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராகவும் நேரு இருப்பதால், இனி மாமூல் பிரச்னை இருக்காதுன்னு, தரைக்கடை வியாபாரிகள் நினைச்சாங்க பா...

''நாங்க அதுக்கும் மேலேங்கிற மாதிரி, தி.மு.க., நிர்வாகிகள் சிலர், ஒவ்வொரு கடையும் மாசம் 5,000 ரூபாய் கொடுக்கணும்னு வியாபாரிகளுக்கு உத்தரவு போட்டுருக்காங்க...

''கொரோனா காலத்துல அவ்வளவு முடியாதேன்னு வியாபாரிகள் கெஞ்ச, மாசம் 2,000 ரூபாய் கொடுக்கணும்னு இறங்கி வந்திருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''திருடுறதுல மட்டும் கூட்டணி போட்டுப்பா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''மதுரை மாவட்டத்துல ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி பாலிஷ் செஞ்சு, கேரளாவுக்கு கடத்தறா... இதுக்காகவே சில ரைஸ் மில்கள் செயல்படறது ஓய்...

''இத பத்தி, நம்ம பேப்பர்லயும் செய்தி போட்டுருந்தா... உடனே மாவட்ட உணவு வழங்கல் துறை பறக்கும் படையினர் 'ரெய்டு' நடத்தினா... சிந்தாமணியில இருக்கற ஒரு ரைஸ் மில்லுல 6,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செஞ்சா ஓய்...

''அதன் உரிமையாளர் உள்ளூர் அ.தி.மு.க., பெண் வார்டு செயலர்... இவருக்கு, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி நல்ல பழக்கமாம் ஓய்...

''அதனால, அந்த அ.தி.மு.க., முக்கிய நிர்வாகி, எதிர்க்கட்சின்னு கூட பார்க்காம தி.மு.க., மாவட்ட நிர்வாகியிடம், பெண் வார்டு செயலருக்காக கெஞ்சியிருக்கார்... தி.மு.க., நிர்வாகி சொல்லவும் அதிகாரிகளும் அமைதியாகிட்டா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

நாயர் கடைக்கு வந்த நபரிடம், ''என்ன செல்வராஜ், தளபதியுடன் போய் நாச்சியம்மனை தரிசனம் செஞ்சிஇருக்கீங்க போல...'' என அந்தோணிசாமி விசாரிக்க, அரட்டை திசை மாறியது.


அதிகாரி மனைவியின் அரசு காரில் சுற்றும் கணவர்!''காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கண்டுக்கவே இல்லையாமுங்க...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''மத்திய அரசின் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டிச்சு, தமிழக காங்கிரசின் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில, சென்னையில இருந்து கன்னியாகுமரி வரை 56 நிர்வாகிகள் சைக்கிள் பயணம் போனாங்க...

''எம்.எல்.ஏ.,க்கள் செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன், 'மாஜி' மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தனை தவிர, மற்ற யாரும் இவங்களை வழியில வரவேற்கவோ, வாழ்த்தவோ வரலைங்க...

''கடைசியா கன்னியாகுமரியில நடந்த நிறைவு நிகழ்ச்சியையும், அந்த மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கண்டுக்காம புறக்கணிச்சிட்டாங்க... இது பற்றி டில்லிக்கு போய், ராகுலிடம் முறையிட மனித உரிமை பிரிவு நிர்வாகிகள் முடிவு பண்ணியிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''விண்ணப்பங்கள் குவிஞ்சும் கண்டுக்காம இருக்காரு வே...'' என, அடுத்த தகவலுக்கு அடி போட்ட அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''சென்னை, கோயம்பேடுல, நகர் ஊரமைப்பு துறையின் இயக்குனர் அலுவலகம் இருக்கு... இங்க ரெண்டு மாசத்துக்கு முன்னாடி புது அதிகாரி பொறுப்புக்கு வந்தாரு வே...

''அவர் வந்ததுல இருந்து, மனை பிரிவு அனுமதி, 2,000 சதுர அடிக்கு மேலான கட்டட அனுமதி வழங்குறதை நிறுத்த சொல்லிட்டாரு...

''தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் மற்றும் புரமோட்டர்ஸ் நிறுவனத்தினரின் 300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், அதிகாரி கையெழுத்துக்காக, டேபிள்ல துாங்கிட்டு இருக்கு வே...

''அதிகாரியை நேர்ல பார்த்து முறையிட்டும், பலன் இல்லை... துறையின் அமைச்சரும் இதை கண்டுக்காம இருக்கிறதால, 'அதிகாரி பெரிய அளவுல காசு பார்க்க இப்படி ஆட்டம் காட்டுதாரோ'ன்னு, ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் புலம்புதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''சரவணவேல்ராஜ் வரார்... 'பிளாக் டீ' போடும் நாயரே...'' என்ற குப்பண்ணாவே, ''அதிகாரியின் காரை, ஆத்துக்காரர் தான் அதிகமா பயன்படுத்திண்டு இருக்கார் ஓய்...'' என்றார்.

''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''பெரம்பலுார் மாவட்டத்துல உயர் அதிகாரியா இருக்கிற பெண்மணி, அ.தி.மு.க., ஆட்சியில நியமிக்கப்பட்டவங்க... மற்ற மாவட்ட அதிகாரிகளை எல்லாம் மாத்தின தி.மு.க., அரசு, இவங்களை மட்டும் கண்டுக்கல ஓய்...

''இதே மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரின் ஆதரவால, அதிகாரி இடமாறுதல்ல தப்பிச்சுட்டாங்க... அதே நேரம், திட்டப் பணிகள்ல, 3.5 சதவீதம் கமிஷன் வாங்கறது, கீழ்மட்ட அதிகாரிகளை அடிமைகள் மாதிரி 'டிரீட்' பண்றதுன்னு அதிகாரி மேல ஏகப்பட்ட புகார்கள் குவியறது ஓய்...

''அவங்க ஆத்துக்காரர், மனைவியின் அரசு கார்ல ஊர் சுத்திண்டு இருக்கார்... மாவட்டத்துல இருக்கற சுற்றுலா தலங்கள், கோவில்கள், தொல்லியல் துறையிடம் இருக்கற நினைவு சின்னங்களை ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லிண்டு, டிரைவர், உதவியாளர், போட்டோ கிராபர்னு அரசு அலுவலர்களையும் தன்னோட கூட்டிண்டு சுத்திண்டு இருக்கார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''வெங்கட் வராரு... பேச பிடிச்சா மனுஷன் விடமாட்டாரு வே...'' என அண்ணாச்சி எச்சரிக்க, பெரியவர்கள் விருட்டென கிளம்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஆக-202106:26:34 IST Report Abuse
D.Ambujavalli லஞ்சம், பதவி மாற்றலில் தப்பிக்க யார் யார் ஆட்சிக்கு வந்தாலும் ‘நிறம் மாறும் பூக்கள்’ என இருக்கும் அதிகாரிகள் வேண்டிய வரை ஆட்டம் போடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X