உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும். திருடி தின்ற உப்புக்காக பல முறை தண்ணீர் குடித்தவர், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன். அதனால் பல நீதிமன்றங்களின் படியேறி இறங்கிக் கொண்டிருக்கிறார்.
- அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி
'இப்போது, உப்பை யாரும் தின்பதில்லை; அதனால் தண்ணீரையும் குடிப்பதில்லை. பழமொழியை மாற்றுங்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி பேட்டி
தென் அமெரிக்க நாடான கியூபாவின் மகத்தான புரட்சியை சீர்குலைக்கும் வகையில், அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்த தடையை நீக்கக் கோரி, 184 நாடுகள் வலியுறுத்திய பிறகும் அமெரிக்கா மதிப்பளிக்கவில்லை.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்
'நம் மாநிலத்தில் வளர்ச்சியை சீர்குலைக்கும் வகையில், சில கட்சிகளின் செயல்பாடுகள் உள்ளன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ள மாட்டீர்கள்... நேராக, கியூபா தானா...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி
அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயகுமார் சபாநாயகராக இருந்த போது, யாருக்கும் புரியாத விஷயத்தை கூறிவிட்டு, 'சட்'டென உட்கார்ந்து விடுவார். நாங்கள் அவர் பேச்சை மதிப்பதில்லை; காமெடியாகத் தான் எடுத்துக் கொள்வோம்.
- தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு
'நடிகர் வடிவேலு ஒரு படத்தில், 'நான் அவனை மோசமாக திட்டுவேன்... அவன் என்னை 'ரொம்ப' மோசமாக திட்டுவான்...' என, கூறுவது போல இருக்கிறது உங்களின் பேச்சு...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேட்டி
தமிழின் பெருமை, தமிழரின் தொன்மை உலக அளவில் பரவுவதால், சிலருக்கு எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. அகழாய்வு வேண்டாம் என நினைக்கும் அவர்களின் வயிறு நன்றாக எரியட்டும். தமிழ் உணர்வு பொங்கட்டும்.
- தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
'பொங்கல் பொங்கட்டும் என, பொங்கல் வாழ்த்து கூறுவது போல கூறுகிறீர்களே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என கூறிய தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வரான பின், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார். அதனால் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு; தேர்தலுக்கு பின் வேறு பேச்சு என மாற்றி பேசுகிறார்.
- எதிர்க்கட்சி துணை கொறடா ரவி
'பிற கட்சிகளுக்கு போட்டியாக, 500க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டால், அவற்றை எப்படி நிறைவேற்ற முடியும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், எதிர்க்கட்சி துணை கொறடா ரவி பேச்சு

தி.மு.க., ஆட்சியில் மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை விட, சிரிப்பு வரக் கூடியதைத் தான் அதிகம் செய்கின்றனர். தி.மு.க.,வினர் ஆட்சிக்கு வருவதற்கு முன், தவறு என்று கூறியதை, ஆட்சிக்கு வந்த பின், அவர்களே செய்து கொண்டிருக்கின்றனர்.
- அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்
'இது தான் அரசியல். பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் இப்படித் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க முடியாது. மார்க்கண்டேய நதியின் குறுக்கே, யார்கோள் அணையை, கர்நாடகா அரசு கட்டியுள்ளது. இதை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஒவ்வொரு கற்களாக நாங்களே அகற்றுவோம்.
- இந்திய கம்யூ., மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன்
'இதுவரை எத்தனை அணைகளின் கற்களை அகற்றியுள்ளீர்கள்... வன்முறைக்கு பிறரை துாண்டாதீர்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., மத்திய குழு உறுப்பினர் மகேந்திரன் பேட்டி
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். இந்த திட்டத்தை கடுமையாக எதிர்ப்போம். தமிழக மக்களின் நலனை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம்.
- தமிழக பா.ஜ., துணை தலைவர் நயினார் நாகேந்திரன்
'நல்ல முடிவு தான்; தமிழக பா.ஜ.,வுக்கு வாழ்த்துகள்...' என, கூறத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

அ.தி.மு.க.,வை வழிநடத்தத் தெரியாமல், இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும் சண்டையிட்டுக் கொண்டுள்ளனர். அந்த சண்டையை தீர்த்துக் கொள்ளத் தான், டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.
- தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன்
'மோடிக்கு வேலை கிடையாதா; அவர் என்ன நடுவரா... நல்லா இருக்குது உங்கள் பேச்சு...' என, கண்டிக்கத் துாண்டும் வகையில், தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் பேட்டி
தமிழகத்தில், கொரோனாவால் இறந்தவர்களை வேறு நோயால் இறந்தனர் என, டாக்டர்கள் சான்றிதழ் வழங்குவது வாடிக்கையாகி விட்டது. இச்செயல் தர்மத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானது. இதுபோன்ற அதிகாரிகளால் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை, பாதிக்கப்பட்டோர் பெற முடியாமல் போகிறது.
- தமிழக பா.ஜ., துணை தலைவர் துரைசாமி
'சான்றிதழ் கொடுக்கும் அதிகாரிகளுக்கு, மேலிடத்திலிருந்து அப்படி உத்தரவு வந்திருந்தால், அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்...' என, கேட்கத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., துணை தலைவர் துரைசாமி அறிக்கை
பொய் வாக்குறுதிகள் கொடுத்து சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர். வரும் உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,வினரின் வியூகத்தை முறியடிக்கும்படி, அ.தி.மு.க.,வினர் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி
'அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப் போயுள்ள அ.தி.மு.க.,வினரை இப்போதைக்கு ஒன்று சேர்ப்பது கடினம்...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE