கோவை: கோவை மாவட்டத்தில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 9 ம்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமயைாக நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலவேறு வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், ஆக., 2 ம் தேதி(நாளை ) முதல் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், 5,6 மற்றும் 7 வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும், ஞாயிற்றுகிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை அமர்ந்து, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5:00 முதல் இரவு 9:00 வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இவற்றை கண்காணிக்க வேண்டும். கேரள- தமிழ்நாடு எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சோதனை சாவடிகள் வழியாக, கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பாதிப்பு இல்லை என்பதற்கான 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனை சான்று மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்று இல்லாவிட்டால், சோதனை சாவடிகளில் 'ரேண்டாம் ஆர்டிபிசிஆர்' பரிசோதனை மேற்க்கொள்ளப்படும். மக்கள் அனைவரும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE