புனே: கேரளாவில் பரவி வந்த ஜிகா வைரஸ், மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்திலுள்ள ஒருவருக்கும் பாதித்துள்ளது தெரியவந்துள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்று ஒருபக்கம் இருக்க, கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றும் பலரை பாதித்து வருகிறது. அங்கு இதுவரை 60க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ், ஜிகா வைரஸ் என ஒரே நேரத்தில் பாதிப்பதால் கேரள மாநிலம் கவலைக்குள்ளாகியுள்ளது. இதனால், கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஜிகா வைரசால் மஹாராஷ்டிராவிலும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பெல்சர் கிராமத்தை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரின் மாதிரிகளை பரிசோதித்ததில் ஜிகா பாதிப்பை தாண்டி சிக்குன்குன்யா வைரசாலும் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. எனினும், அவர் முழுமையாக குணமடைந்துவிட்டதால் யாரும் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.