சென்னை: விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், மக்களுக்கு பயன்தரும் வகையில் அமைய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற, சட்டசபையில் தமிழக அரசு இந்த ஆண்டு இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. வழக்கமான பட்ஜெட்டுடன், விவசாய பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள், விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய சங்கங்களை ஆலோசனை செய்து, விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் அவர்களது உழைப்புக்கு ஏற்ற உரிய பயன்களை பெறும் வகையில், சிறந்த திட்டங்களை உள்ளடக்கி விவசாய பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என அமைச்சர் மற்றும் அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

பொது பட்ஜெட்டை பொறுத்தவரை, பொருளாதாரம் மற்றும் நிதி நிலை வல்லுநர்கள், பெருந்தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை ஆலோசித்து, அவர்களிடம் இருந்து பெற்ற கருத்துகளை அடிப்படையாக வைத்து, மக்களின் வாழ்வு மறுமலர்ச்சி பெறும் வகையிலும், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், பட்ஜெட் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.