சென்னை: கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு, வரும் 5ம் தேதி முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கேரளாவில், கோவிட் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. அங்கு தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக 20 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பும் உள்ளது. இதனையடுத்து, அம்மாநில எல்லையை ஒட்டியுள்ள தமிழக சோதனை சாவடிகளில் கண்காணிப்பு பணி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும்பரிசோதனைகளை ஆய்வு செய்த பின், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் தெர்மல் ஸ்க்ரீனிங் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தில் 13 நிமிடத்தில், கோவிட் பரிசோதனை முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை விரைவில் வெளியாக உள்ளது. மக்கள் நலனுக்காக தான், அதிக கூட்டம் கூடும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

வரும் 5ம் தேதி முதல், கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்கள், 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டதற்கான சான்றிதழை காட்டியும் வரலாம். கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு, கோவை, கன்னியாகுமரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்கள் 13 வழியாக வரலாம். அந்த பகுதிகள் 5ம் தேதி முதல் போலீசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். கேரளாவில் இருந்து சாலை வழியாகவும், விமானம் மூலமும், ரயில்கள் மூலமும் தமிழகத்திற்குள் வரும் அனைவரும் இந்த கட்டுப்பாட்டின்படிதான் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.