கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே ஆடி கிருத்திகை பண்டிகை அடுத்து நேர்த்திக்கடன் செலுத்த 40 அடி உயரத்தில் கிரேனில் அழகு குத்தி சென்ற இளைஞர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிக்கிருத்திகை அன்று முருகனுக்கு பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்று காரணமாக அரசின் தடை உத்தரவை அடுத்து ஆடிக்கிருத்திகை விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு நோய் தொற்று குறைந்துள்ள நிலையில் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படும் என பொதுமக்கள், பக்தர்கள் நினைத்திருந்த நிலையில் தற்போது மீண்டும் நோய் தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு ஆடி கிருத்திகை மற்றும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட தடை விதித்தது.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள எட்றப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்காக சின்னகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ் உட்பட அதே கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கிரேன் வாகனத்தில் தங்கள் முதுகுகளில் அலகு குத்திக்கொண்டு 40 அடி உயரத்தில் முருகன் கோவிலை நோக்கி அந்தரத்தில் தொங்கியவாறு பம்பை முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

மேட்டுப்பாளையம் என்னுமிடத்தில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென 40 அடி உயரத்தில் அந்தரத்தில் அலகு குத்தி சென்ற ஆகாஷ் என்பவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தான் கீழே விழுவதை உணர்ந்துகொண்ட ஆகாஷ் தண்ணீரில் குதிப்பது போல் தரையில் குதித்தார். இதனால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதனையடுத்து நேர்த்திக்கடன் செலுத்த கிரேனில் சென்றவர்கள் கீழே இறங்கி நடந்து சென்று கோவிலில் சாமி தரிசனம் சென்று வீடு திரும்பினர். ஆடி கிருத்திகை ஆடி 18 விழா கொண்டாட அரசு தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி நேர்த்திக்கடன் செலுத்த சென்று விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE