பாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக பா.ஜ.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக பா.ஜ.,

Added : ஆக 03, 2021 | கருத்துகள் (8)
Share
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் உள்ளது. இங்கு, பாரத மாதா சிலை வைக்க வேண்டும் என்பது, சுப்ரமணிய சிவாவின் கனவு. இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி, பாரத புரத்தில், 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, பாரத மாதா ஆலயம் கட்ட பாடுபட்டார். போராட்டம் போதுமான நிதி திரட்ட, ஊர் ஊராக நடை பயணம் சென்றார். 1923ல், சித்தரஞ்சன் தாஸை
 பாரத மாதாவுக்கு நினைவாலயமா: கொந்தளிக்கிறது தமிழக பா.ஜ.,

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில், சுதந்திர போராட்ட தியாகி சுப்ரமணிய சிவா மணிமண்டபம் உள்ளது. இங்கு, பாரத மாதா சிலை வைக்க வேண்டும் என்பது, சுப்ரமணிய சிவாவின் கனவு.

இதற்காக, தர்மபுரி பாப்பாரப்பட்டி, பாரத புரத்தில், 6 ஏக்கர் நிலம் வாங்கினார். அங்கே, பாரத மாதா ஆலயம் கட்ட பாடுபட்டார்.


போராட்டம்போதுமான நிதி திரட்ட, ஊர் ஊராக நடை பயணம் சென்றார். 1923ல், சித்தரஞ்சன் தாஸை அழைத்து வந்து, பாரத மாதா ஆலயத்துக்கு, அடிக்கல் நாட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், சிவா இறந்து விட்டார். இதனால், அவரது கனவு நிறைவேறவில்லை. இந்நிலையில், 1.5 கோடி ரூபாயில், அதே பாரத புரத்தில், பாரத மாதாவுக்கு, தமிழக அரசு சார்பில், நினைவாலயமும் அருகில் நுாலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைத்தார், செய்தி துறை அமைச்சர் சாமிநாதன்.

இதற்கிடையில், பாரத மாதாவுக்கு எப்படி நினைவாலயம் எழுப்பலாம் என கேட்டு, பா.ஜ.,வினர் கொந்தளிக்கின்றனர். இது குறித்து, அக்கட்சியின் மாநில பொருளாளர் சேகர் கூறியதாவது:சுப்ரமணிய சிவாவின் கனவு நிறைவேற, நிறைய பேர் முயற்சி எடுத்தனர். தமிழக காங்., தலைவராக இருந்த குமரி அனந்தனும் முயற்சித்தார். அங்கிருக்கும் மக்களும், பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதன் விளைவாக, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பாரதபுரத்தில் பாரத மாதாவுக்கு ஆலயமும், பக்கத்தில் நுாலகமும் கட்டி முடிக்கப்பட்டது. அதை திறந்து வைப்பதற்குள், பழனிசாமி., ஆட்சி முடிவுக்கு வந்து விட்டது.

அரசு பணிகளுக்காக, நாளை முதல்வர் ஸ்டாலின், தர்மபுரி செல்கிறார். அந்த சமயத்தில், இந்த ஆலயத்தை ஏன் திறக்கவில்லை என, யாரும் கேள்வி எழுப்ப கூடும் என்பதால், அவசர அவசரமாக, அமைச்சர் சாமிநாதனை விட்டு, திறந்து வைத்துள்ளனர்.


தலைக்குனிவு

ஆனால், பாரத மாதா நினைவாலயம் என, அரசு தரப்பில் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களுக்கு தான் நினைவாலயம் கட்டப்படும். கோடிக்கணக்கானவர் மனங்களில் வாழும் தெய்வம் பாரத மாதாவை சாகடித்துள்ளனர். இது, பாரத மாதாவை நேசிக்கும் இந்தியர்களுக்கு தலைக்குனிவு.இவ்வாறு, அவர் கூறினார்.


'அரசியல் செய்யக் கூடாது!'சிலையும், ஆலயமும், நுாலகமும் அமைக்கப்பட்டதே, பாரத மாதாவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்கப்பட்டதால் தான். அதனால் தான், பாரதமாதாவை போற்றும் வகையில், உடனடியாக திறப்பு விழா நடத்தப்பட்டது. விழா சிறப்பாக தான் நடந்தது.பாரத மாதாவுக்கு எல்லாரும் மரியாதை கொடுப்பதை போல, அரசும் மரியாதை கொடுக்கிறது. போற்றுதலுக்குரிய இந்த விஷயத்துக்குள், எந்த உள்நோக்கமும் கிடையாது. அதனால், இதில் யாரும் அரசியலை புகுத்த வேண்டாம். பாரத மாதா நினைவாக, ஒரு ஆலயம் என்பதை தான் நினைவாலயம் என, அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே தவிர, அதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.

இப்போது, அதை வைத்து ஒரு சர்ச்சை அல்லது கோரிக்கை எழுகிறது என்றால், அரசுத் தரப்பில் ஆலோசித்து, நல்ல முடிவு எடுக்கப்படும்.

சாமிநாதன்

செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர்.


மாற்றான் தாய் மனப்பான்மை!

-பாரத மாதாவுக்கு உரிய மரியாதையை, தி.மு.க., அரசு தருவதில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 1.5 கோடி ரூபாய் ஒதுக்கி, பாரத மாதாவுக்கு சிலையும், ஆலயமும் அமைக்க உத்தரவிடப்பட்டது. சிலையும், கோவிலும் அமைக்கப்பட்ட நிலையில், அதை தி.மு.க., அரசு ரகசியமாக திறந்து வைக்க வேண்டியதன் நிர்பந்தம் என்ன?

வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, இந்தியாவின் பண்பாட்டு வடிவமாக இருக்கிற, பாரத மாதா தாயை போற்றுவதில், மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; ஏற்புடையது அல்ல.

-வைகைச்செல்வன்

அ.தி.மு.க., இலக்கிய அணி செயலர்.
-- நமது நிருபர் --

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X