பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இடஒதுக்கீடு குறித்து ஐகோர்ட் கேள்வி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இடஒதுக்கீடு குறித்து ஐகோர்ட் கேள்வி

Added : ஆக 03, 2021
Share
சென்னை: 'மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும், 10 சதவீத ஒதுக்கீடு, மொத்த ஒதுக்கீடான, 50 சதவீதத்துக்குள் வருகிறதா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை

சென்னை: 'மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும், 10 சதவீத ஒதுக்கீடு, மொத்த ஒதுக்கீடான, 50 சதவீதத்துக்குள் வருகிறதா' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முறை குறித்து, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து, 2021- 22 முதல் அமல்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி, உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மறுப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., தரப்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அகில இந்திய ஒதுக்கீட்டில், மாநில சட்டப்படி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முறை மற்றும் விதம் குறித்து, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத ஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.

தி.மு.க., சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 69 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. ''தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தின் அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 50 சதவீதம் வழங்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை, மத்திய அரசு முழுமையாக அமல்படுத்தவில்லை,'' என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ''மொத்த ஒதுக்கீடு, 50 சதவீதம் மேல் போக முடியாது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டும், 50 சதவீதம் என்றால், மராத்தா பிரிவினருக்கு ஒதுக்கீடு வழங்கிய வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாகி விடும்,'' என்றார்.

இதையடுத்து, 'மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீதம்; ஆதிதிராவிடருக்கு, 15 சதவீதம்; பழங்குடியினருக்கு, 7.5 சதவீதம், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கு, 10 சதவீதம் என கூறப்பட்டு உள்ளது. 'இதன்படி பார்த்தால், 59.5 சதவீதம் வருகிறதே' என, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

மேலும், தமிழக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், '50 சதவீத ஒதுக்கீட்டுக்குள் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10 சதவீதம் வருகிறதா' எனவும், கேள்வி எழுப்பினர்.அதற்கு, மூத்த வழக்கறிஞர் வில்சன், ''பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான ஒதுக்கீடும், ஜாதி ரீதியானது தான்,'' என்றார்.

அதைத்தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க, அவகாசம் கோரியதை தொடர்ந்து, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X