உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, பயன்படாத போர்வெல்களில், மழை நீரை சேகரித்தல் உட்பட பணிகளை ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக தீவிரப்படுத்தப்பட வேண்டும்.குடிமங்கலம் ஒன்றியத்தில் பருவமழை பொழிவு குறைவு காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் நிலையாக இருப்பதில்லை. மழை நீர் சேகரிப்பு மட்டுமே இதற்கான தீர்வாக உள்ளது.ஆனால், அரசு உத்தரவு அடிப்படையில், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே, மழை நீர் சேகரிப்பு குறித்து, அரசுத்துறையினர் கவனம் செலுத்துகின்றனர்.மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளில், தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு, மேற்கொள்வதில்லை.சில ஆண்டுகளுக்கு முன், குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள, 400 கட்டடங்களிலும் மழை நீரை சேகரிக்க கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.மேலும், சோதனை முயற்சியாக, கிராமங்களில், பயன்பாடு இல்லாமல், கைவிடப்பட்ட போர்வெல்களில் மழை நீரை சேகரிக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக, 7 போர்வெல்களில், சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி, குறிப்பிட்ட ஆழத்திற்கு, மணல் கொட்டி, மழை நீர் முறையாக அப்பகுதிக்கு செல்ல கான்கிரீட் தளமும் ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, பயனில்லாமல், காட்சிப்பொருளாக, 95க்கும் அதிகமான போர்வெல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அங்கும், மழை நீர் சேகரிக்க, பணிகளை மேற்கொள்ள, கிராம மக்கள் வலியுறுத்தினர்.ஆனால், பணிகள் கண்டுகொள்ளப்படவில்லை. தற்போது, குடிமங்கலம் ஒன்றியத்துக்கு, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டம் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது; எனவே, கிராமங்களில், வீணாக இருக்கும் போர்வெல்களில், உடனடியாக மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த ஒன்றிய நிர்வாகத்தை, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE