பொள்ளாச்சி:பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாயில் முன், தேங்கியுள்ள மழைநீர் குளத்தில், வாத்துகள் நீந்தி விளையாடுவது, காண்பதற்கு வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.பொள்ளாச்சியின் பழம் பெருமையாகவும், நகரின் வளர்ச்சிக்கும், வர்த்தகத்துக்கும் ஆதாரமாகவும் விளங்கியது ரயில்வே ஸ்டேஷன். பிரிட்டிஷ் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் வழித்தடமும், இயங்கிய ரயில்களும் தான், பொள்ளாச்சி சந்தையை ஆசிய அளவில் பெரிய சந்தையாக வளர்க்க உதவியது என்றால் அது மிகையில்லை.ஆனால், கால மாற்றத்தில், ரயில்வே துறையில் பொள்ளாச்சிக்கான முக்கியத்துவம் திட்டமிட்டு குறைக்கப்பட்டது. அதன் விளைவாக, தற்போது பொள்ளாச்சி வழித்தடத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன; ஒரு பயணியர் ரயில் கூட இயங்குவதில்லை.இப்படி, முக்கியத்துவத்தை இழந்துள்ள நிலையில், ரயில்வே ஸ்டேஷன் வழித்தடம், பஸ் ஸ்டாப், பெயர் பலகை, முகப்பு பலகை என அனைத்தையுமே பராமரிப்பதில் அலட்சியம் காட்டப்படுவது, ரயில்வே ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.அதற்கு உதாரணமாக, ரயில்வே ஸ்டேஷனின் முகப்பில் ரோடு சரியாக அமைக்கப்படாமல், பள்ளமாக உள்ளதால், மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. அதில், அக்கம்பக்கத்தில் வளர்க்கப்படும் வாத்துக்கள் நீந்துகின்றன.ரோட்டில் வாத்துகள் நீந்தும் காட்சி காண்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியை பராமரிப்பதில், உள்ளாட்சி நிர்வாகம் காட்டும் அலட்சியத்தை எண்ணும் போது, வேதனை அளிப்பதாக உள்ளது.இனியாவது, ரயில்வே சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE