உடுமலை:உடுமலை நகரில், குட்டைத்திடல் அமைந்துள்ளது. வருவாய்த்துறைக்குச் சொந்தமான இந்த நிலம், கோவில் திருவிழாவின் போது, ஏலம் விடப்படுகிறது. திடலைச் சுற்றி, அரசு அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேஷன், நுாலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.அதேநேரம், சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், கட்டடங்களை இடித்த மண், கற்கள் என, பயனற்ற பொருட்களை எவரும் முறையாக அகற்றுவது கிடையாது. சிலர், இரவு நேரங்களில், இத்தகைய கட்டடக்கழிவுகளை, வாகனங்களில் கொண்டு வந்து, குட்டை திடலில் கொட்டுகின்றனர். தவிர, குப்பைகளும் கொட்டப்படுவதால், இனிவரும் நாட்களில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:இப்பகுதிக்கு அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர். சிலர், கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ள மறைவான இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். அருகே, வணிக நிறுவனங்கள் செயல்படுவதால், சுகாதாரம் பாதிக்கிறது. துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அங்கு, தொடர்ந்து கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதையும், மக்கள் வாடிக்கையாக்கிக் கொள்வர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE