மட்டை விலை உயர்வு; நார் விலை சரிவு: முரண்பாடால் தொழில் ஸ்தம்பி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மட்டை விலை உயர்வு; நார் விலை சரிவு: முரண்பாடால் தொழில் ஸ்தம்பி

Added : ஆக 04, 2021
Share
பொள்ளாச்சி:நார் உற்பத்தியில், மூலப்பொருளான தேங்காய் மட்டை விலை குறையாத நிலையில், நார் விலை பண்டலுக்கு, 100 ரூபாய் வரை சரிந்துள்ளதோடு, மழையும் தொடர்வதால் நார் உற்பத்தியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.கோவை மாவட்டத்தில், குறிப்பாக, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு பகுதியில், 700க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.இங்கு, உற்பத்தியாகும் தென்னை

பொள்ளாச்சி:நார் உற்பத்தியில், மூலப்பொருளான தேங்காய் மட்டை விலை குறையாத நிலையில், நார் விலை பண்டலுக்கு, 100 ரூபாய் வரை சரிந்துள்ளதோடு, மழையும் தொடர்வதால் நார் உற்பத்தியாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.கோவை மாவட்டத்தில், குறிப்பாக, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு பகுதியில், 700க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.இங்கு, உற்பத்தியாகும் தென்னை நார், பெரும்பாலும், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில், சீனா நிறுவனங்கள், ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்தன.இதனால், 30 கிலோ எடை கொண்ட ஒரு பண்டல் நார், 380 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை துவங்கி, பொள்ளாச்சி பகுதியில் பெய்ததால், நார் உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. உற்பத்தி செய்த நார் உலர வைப்பது பாதித்ததால், நார் உற்பத்தியும் முடங்கியது.இதற்கிடையில், நார் பண்டல் விலையும் மளமளவென சரிந்து, தற்போது, 280 - 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும், ஆர்டர் இல்லாததால், கொள்முதல் செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது.நார் உற்பத்தி பாதிக்கப்பட்டதற்கு, தேங்காய் மட்டை விலை குறையாமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. தற்போது, கருப்பு மட்டை டன், 2,300; பச்சை மட்டை, 2,600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.நார் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சுதாகரன் கூறியதாவது:மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவி மற்றும் வங்கிக்கடன் சலுகையால், பொள்ளாச்சி பகுதியில், 700க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.இருப்பினும், வறட்சி, தொடர் மழை, வெள்ளை ஈ தாக்குதல் காரணங்களால் மட்டைக்கு கிராக்கி நிலவுகிறது. இதனால், தற்போது தொழில் நலிவடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.இனி மேல் புதிதாக தொழில் துவங்குபவர்கள், நார் ஏற்றுமதியை மட்டும் நம்பாமல், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்து, இழப்பை சந்திக்காமல் இருக்க வேண்டும். மூலப்பொருளான மட்டை விலையை குறைத்தால், நலிவடைந்த நார் தொழிற்சாலைகள் மீண்டும் மறுமலர்ச்சி பெற்று, தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X