கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசத்தை மறந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், தொற்று மீண்டும் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
கலெக்டர் அதிரடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே 3ம் அலையில் இருந்து தப்ப முடியும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினைத் தடுக்கும் வகையில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. சுகாதாரத் துறை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 10 லட்சத்து 63 ஆயிரத்து 592 பேர் உள்ளனர்.இதில், 3 லட்சத்து 33 ஆயிரத்து 939 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 3 ஆயிரத்து 963 கர்ப்பிணிகள், 1,495 பாலுாட்டும் தாய்மார்கள், 2,806 மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், சில நாட்களாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 45ஆக உள்ளது. இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவுதற்கான வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.ஆனால், கொரோனா குறித்து மக்களிடையே அலட்சியபோக்கு ஏற்பட்டுள்ளதால், சமூக இடைவெளி என்பது வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருக்கிறது.
சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினரின் அபராதத்திற்கு பயந்தே மக்கள் முகக் கவசம் அணிகின்றனர்.குறிப்பாக கிருமிநாசினியின் பயன்பாடு முற்றிலுமாக குறைந்துள்ளது. சுப, துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பொதுமக்கள் சரக்கு வேன், லாரி, டிராக்டர் டிப்பர் உள்ளிட்ட லோடு வாகனங்களில் கூட்டம், கூட்டமாக செல்கின்றனர். இதுதவிர, காய்கறி மார்க்கெட், உழவர்சந்தை, பெரிய அளவிலான துணி, நகை கடைகள், இறைச்சிக் கடைகள் மற்றும் அரசு பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
மக்களின் இந்த அலட்சியப் போக்கினால், மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் அதிகளவில் கூடும் கடைகள், காய்கறி மார்க்கெட், வார சந்தை உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றபடுகிறதா என்பதை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை : மூன்றாம் அலை பரவல் முன்னெச்சரிக்கையாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 45 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தலா 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையின் போது, மாவட்டத்தில் பாதிப்பு அதிகமாக இருந்த 14 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில், 70 சதவீத மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் 6 கிராமங்களில் 95 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement