தமிழக பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக பட்ஜெட் வரும் 13ம் தேதி தாக்கல்

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (17)
Share
சென்னை :முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் முதல் பட்ஜெட், வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக 9ம் தேதி, தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று
தமிழக பட்ஜெட் தேதி  13ம் தேதி அறிவிப்பு

சென்னை :முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தமிழக அரசின் முதல் பட்ஜெட், வரும் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னதாக 9ம் தேதி, தமிழக அரசின் தற்போதைய நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி முடியும் நிலையில், 2021 - 22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்.அவரது தலைமையிலான தி.மு.க., அரசின் முதல் பட்ஜெட், அதாவது 2021 - 2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை, வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தியாகராஜன், முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.


கொரோனா பரவல்; அதனால் பொருளாதாரம் பாதிப்பு, வருவாய் பற்றாக்குறை என, பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில், தி.மு.க., அரசு முதல் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. சட்டசபை தேர்தலின்போது, முதியோர் உதவித்தொகை, மாதம் 1,500 ரூபாயாக உயர்வு; குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் இலவசம்; காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்; பெட்ரோல் லிட்டருக்கு ஐந்து ரூபாய், டீசல் லிட்டருக்கு நான்கு ரூபாய் விலை குறைப்பு என்பது உட்பட, பல்வேறு வாக்குறுதிகளை, தி.மு.க., தலைமை அளித்தது. இவற்றை நிறைவேற்றும் வகையில், புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது.


வெள்ளை அறிக்கைபட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழக அரசின் நிலை நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை, வரும் 9ம் தேதி, நிதி அமைச்சர் தியாகராஜன் வெளியிட உள்ளார். அதில், தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை, கடன் நிலுவை, ஆண்டுதோறும் செலுத்தப்படும் வட்டி, பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த கடன், வருவாய் இழப்பு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை என, அனைத்து விபரங்களும் இடம்பெறும் என தெரிகிறது.


கூட்டம்பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக, வரும் 13ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை, கலைவாணர் அரங்கம் மூன்றாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில், சட்டசபை கூட்டம் நடக்கும் என, சட்டசபை செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மறுநாள், 14ம் தேதி அல்லது 16ம் தேதி, வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், முதல் முறையாக தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. கூட்டத் தொடர், எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது, 13ம் தேதி மாலையில், சபாநாயகர் தலைமையில் நடக்கும், அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.


மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்?தமிழக பட்ஜெட்டில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இடம்பெற்ற திட்டங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், எந்தெந்த திட்டங்களுக்கு நடப்பாண்டில் முக்கியத்துவம் அளிப்பது என, ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். காலியாகவுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும், ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், விரைவில் தேர்தல் நடக்கவுள்ளது.

எனவே, ஒன்பது மாவட்டங்களில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள், பட்ஜெட்டில் திட்டங்களாக அறிவிக்கப்பட உள்ளன.பட்ஜெட்டில் இடம்பெற முடியாத திட்டங்களை, துறை ரீதியான மானிய கோரிக்கை மற்றும் 110 விதியின் கீழ் அறிவிக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், அதற்கான பணிகளும் துவங்கி உள்ளன. விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுனர்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், பட்ஜெட் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X