டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: 7 பேருக்கு இரட்டை தூக்கு

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 04, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
சென்னை :பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஏழு பேருக்கு இரட்டை துாக்கு தண்டனை; இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா 58; பிரபல நரம்பியல் நிபுணர். இவர் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
டாக்டர் சுப்பையா, கொலை வழக்கு, 7 பேருக்கு இரட்டை துாக்கு

சென்னை :பிரபல நரம்பியல் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் ஏழு பேருக்கு இரட்டை துாக்கு தண்டனை; இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா 58; பிரபல நரம்பியல் நிபுணர். இவர் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது வீடு துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் உள்ளது.கடந்த 2013 செப்.14ல் ஆர்.ஏ.புரத்தில் உள்ள மருத்துவமனையில் பணிமுடித்து சுப்பையா காரில் ஏற முயன்றபோது மர்ம நபர்கள் தலை கழுத்து கை என 26க்கும் மேற்பட்ட இடங்களில் அவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பினர்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி செப்.23ல் இறந்தார்.


இதுகுறித்து சுப்பையாவின் உறவினர் மோகன் என்பவர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொலை வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். சுப்பையாவை கொலை செய்த காட்சிகள் தனியார் மருத்துவமனை முன் இருந்த 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.


நிலத்தகராறுமருத்துவமனையில் சுப்பையா உயிருக்கு போராடிய நிலையிலும் தனக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கானிமடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கும் அஞ்சு கிராமத்தில் உள்ள 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பாக பிரச்னை இருப்பதாக டாக்டர்கள் மற்றும் போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வந்தனர். தற்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக உள்ள பாலகிருஷ்ணன் 2013ல் சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்தார். இவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்கள் குறித்து துப்பு துலக்கும் பணி நடந்தது.


10 பேர் கைதுஅப்போது கானிமடத்தைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி 55, அவரது மனைவி மேரிபுஷ்பம் 58, மகன்கள் வழக்கறிஞர் பாசில் 26, பொறியாளர் போரீஸ் 24, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வில்லியம் 31, டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார் 37, சதித் திட்டம் போட்டது தெரிந்தது.அவர்களுடன் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கூலிப்படையினர் சதீஷ்குமார் 37; முருகன் 25; செல்வபிரகாஷ் 23; அய்யப்பன் 24, கபடி வீரர் ஏசுராஜன் 26, ஆகியோரும் சதி திட்டம் தீட்டி 10 பேரும் சேர்ந்து சுப்பையாவை கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது பொன்னுசாமியின் மகன் பாசில் தன் நண்பரான வில்லியத்திடம் 'அஞ்சுகிராமத்தில் எங்களுக்கும் டாக்டர் சுப்பையா என்பவருக்கும் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பாக பிரச்னை உள்ளது. சுப்பையாவை கொலை செய்து விட்டு இந்த நிலத்தை பங்கு பிரித்துக் கொள்வோம்' எனக் கூறியுள்ளார்.இதுபற்றி பாசில் மற்றும் வில்லியம் ஆகியோர் திருநெல்வேலி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். அவருக்கும் நிலத்தை பிரித்து கொடுப்பது என முடிவு செய்துள்ளனர். இதற்கு பொன்னுசாமி, மேரிபுஷ்பம், போரீஸ் ஆகியோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.அதன்பின் ஜேம்ஸ் சதீஷ்குமார் ஏற்பாட்டில் சுப்பையாவின் உயிருக்கு 50 லட்சம் ரூபாய் விலைபேசி கூலிப்படையைச் சேர்ந்த சதீஷ்குமார் முருகன் செல்வபிரகாஷ் அய்யப்பன் ஆகியோர் வாயிலாக 'தீர்த்து'க் கட்டியது தெரிய வந்தது.


57 சாட்சிகள்இந்த வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் 2015 முதல் நடந்து வந்தது. அய்யப்பன் 'அப்ரூவர்' ஆக மாறினார். கொரோனா காலத்திலும் இந்த ஒரு வழக்கில் மட்டும் நேரடி விசாரணை நடந்தது.அரசு தரப்பில் குற்றவியில் வழக்கறிஞர் விஜயராஜ் வாதாடினார். 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 173 ஆவணங்கள் 42 சான்று பொருட்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பை அறிவிக்கும் முன் குற்றம் சாட்டபட்ட அய்யப்பன் தவிர ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார்.


அதிரடி தீர்ப்புபிற்பகலில் நீதிபதி அறிவித்த தீர்ப்பு விபரம்:பொன்னுசாமி, பாசில், போரிஸ் வில்லியம், ஜேம்ஸ், சதீஷ்குமார், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு இரட்டை துாக்கு தண்டனை மற்றும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.மேரி புஷ்பம் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அய்யப்பன் அரசு சாட்சியானதால் அவருக்கு தண்டனை இல்லை.இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.


அதிகாரி திருமணம்இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த ஐ.பி.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன் சுப்பையாவின் மகள் ஸ்வேதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.தீர்ப்பு குறித்து புகார்தாரரான மோகன் கூறுகையில் ''மிகச்சிறந்த டாக்டரை இழந்துவிட்டோம். இந்த தீர்ப்பு பலருக்கு பாடமாக இருக்க வேண்டும். இனி எவருக்கும் இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது'' என்றார்.


'தீர்ப்பு முன் உதாரணம்'தீர்ப்புக்கு பின், டாக்டர் சுப்பையா மனைவி சாந்தி அளித்த பேட்டி:நானும், என் கணவரும் எப்போதுமே நீதித்துறை மீது நம்பிக்கை வைத்திருந்தோம்; அது வீண்போகவில்லை. தாமதமானாலும் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. தீர்ப்பால் என் கணவர் திரும்பி வரப்போவதில்லை. ஆனால், இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க, இந்த தீர்ப்பு முன் உதாரணமாக இருக்கும்.
என் கணவர் மரண வேதனை அனுபவித்த ஒன்பது நாட்களில், மணமாகாத எங்கள் மகள்களை நினைத்து கலங்கினார். அவர் கலங்கியதற்கு ஆறுதலான தீர்ப்பு இது.இவ்வாறு அவர் கூறினார்.


'மிரட்டலால் இழுத்தடிப்பு'அரசு சிறப்பு வழக்கறிஞர் விஜயராஜ் கூறியதாவது: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு, சாட்சிகள் மிரட்டலால் இழுத்தடிக்கப்பட்டது. இந்த வழக்கை தினசரி அடிப்படையில் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா காலத்திலும், நேரடி விசாரணை நடத்தப்பட்டது.'சிசிடிவி' காட்சிகள், அய்யப்பன் அப்ரூவர் ஆனது ஆகியவை வழக்கிற்கு சாதகமாக இருந்தன. அரசு தரப்பில் சாட்சிகள் நிலையானதாக இருந்தனர்.குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், உச்ச பட்ச தண்டனை வழங்க, அரசு தரப்பில் கோரிக்கை வைத்தோம்.இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. தவறு செய்வோருக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக இருக்கும். புலன் விசாரணை அதிகாரிகளுக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
06-ஆக-202104:19:26 IST Report Abuse
meenakshisundaram சொத்து அபகரித்தல் என்ற ஒன்றே குறிக்கோள் -இதுலே ஏன் காரணம் கூறப்படவில்லை என்று கேட்கிறார்கள் ?
Rate this:
Cancel
05-ஆக-202123:36:29 IST Report Abuse
அப்புசாமி இரட்டைத் தூக்கு. ஓ புரியுது. இவிங்களுக்கு ஒரு கயிற்றில் தூக்கு போட்டால் தப்புச்சு வந்துருவாங்க. இரட்டைக் கயிறு தேவை. இல்லேன்னா, கருணை மனுவை ஜனாதிபதி ஏத்துக்கிட்டாருன்னா, இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேத்தலாம்.
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஆக-202121:45:02 IST Report Abuse
Chinnappa Pothiraj குற்றம் செய்பவர்கள் மீண்டும் மீண்டும் செய்வதற்கும்,பெருகுவதற்கும் காரணமே நம்முடைய சட்டங்களும்,நேர்மையற்ற மனிதர்களின் பின்புலம்தான் காரணம்.நேர்மையானவர்கள் கூட தாக்கப்படுகிறார்கள்.அரபு நாடுகளைப்போல் குற்றத்திற்கு உடனடியாக தண்டனை செயல்படுத்துங்கள்,குற்றங்கள் தானாகவே குறைந்துவிடும்.குற்றவாளிகளுக்கு தண்டனைமூலம் நீதிநிலைநாட்டப்பட்டுள்ளது என்று ஆறுதல் இருந்தாலும்,க அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனையை இந்தநாடு செயல்படுத்திஇருந்தால் பல குற்றங்களை நடைபெறாமலும் நேர்மையான மக்களும் சுகமாக வாழ்ந்திருப்பர்.இதில் பாதிக்கப்பட்ட குடும்பம்பட்ட மன உழைச்சலும் பொருளாதாரீதியாகவும் கணக்கிலடங்காதவையாகத்தான் இருக்கும்.குற்றங்கள் நடந்தால்தான் காவல்துறை,புலனாய்வுத்துறை,ழக்கறிஞர்,நீதித்துறைஇவர்களுக்கெல்லாம் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்ற எண்ணத்திற்காக குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்காமல் குற்றங்கள் பெருகுவதற்கு அரசின் சட்டங்ளும் செயல்படுத்துபவர்களும் உறுதுணையாக இருக்கிறார்களா? யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.சட்டத்தைகடுமையாக்கி குற்றம்இல்லாநாடாக உருவாக்குங்கள்.மக்களைநிம்மதியாக வாழவிடுங்கள்.வந்தேமாதரம்,ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X