'கிறிஸ்துவர்களின் உற்சாகத்துக்காக பேசியது தான் பரபரப்பாகி, சர்ச்சையாகி இருக்கிறது. திட்டமிட்டு இதைப் பேசவில்லை' என, பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறினார்.
அமைச்சர் நாசர் கூறியதாவது:ஹிந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என்ற எந்தவிதமான இன, மொழி, மதப் பாகுபாடும் பார்க்காமல், நிகழ்ச்சிக்கு யார் அழைத்தாலும் செல்கிறோம். அங்கு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசுகிறோம்.
அப்படித் தான், திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் உள்ள அற்புத ஜெபகோபுரம் ஏ.ஜி., தேவாலயத்தின் 40ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்துக்கு என்னை அழைத்தனர். விரும்பித் தான் சென்றேன். விழாவில் என்னை சிறப்புரையாற்ற கூறினர். எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறோமோ, அந்த இடத்தில் கூடியிருக்கும் மக்கள் சந்தோஷப்படும் படி பேசுவது தான்,
பேச்சாளர்களின் இலக்காக இருக்கும்.
அந்த அடிப்படையில், கிறிஸ்துவ நிகழ்ச்சி என்பதால், கூடியிருந்த கிறிஸ்துவர்களின் சந்தோஷத்துக்காக சில விஷயங்களைப் பேசினேன். துவக்கத்தில், கடந்த கால ஆட்சிகள் எப்படி நடந்தன என்பது குறித்துப் பேசினேன். பின், 'இந்தியா பல்வேறு மொழிகள், மதங்கள் சார்ந்து இருந்தாலும், ஒவ்வொரு மதத்தவரும் தங்களுக்குள் வேற்றுமை இல்லாமல் தான் பழகி வருகின்றனர். அதனால், வலுவான இந்தியாவை, மத ரீதியில் பிளவுபடுத்த முடியாது'என்றேன்.
இப்படி பேசிய பின், 'கிறிஸ்துவர்களின் வலிமையான ஜெபத்தால் தான், இன்று தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்துவ மக்களின் ஜெபம் அத்தனை வலிமையானது. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் மிக முக்கிய காரணம், கிறிஸ்துவர்களின் ஜெபம் தான்' என, கூடியிருந்த மக்களின் உற்சாகத்துக்காக பேசினேன். கிறிஸ்துவர்களின் உற்சாகத்துக்காக பேசியது தான் பரபரப்பாகி, சர்ச்சையாகி இருக்கிறது. திட்டமிட்டு இதைப் பேசவில்லை. இவ்வாறு அமைச்சர் விளக்கம் அளித்தார். - நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE