இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 05, 2021 | Added : ஆக 05, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பண மோசடி வழக்கில் கவுதம் தாப்பர் கைதுபுதுடில்லி-டில்லியின் அவந்தா குழும நிறுவன அதிகாரி கவுதம் தாப்பர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.டில்லி மற்றும் மும்பையில் செயல்படும் அவந்தா குழும நிறுவனங்கள் 'யெஸ்' வங்கியில் 1 900 கோடி ரூபாய் கடன் வாங்கின. இந்த கடன்களில் சலுகை தளர்வு மற்றும் தள்ளுபடியுடன் மேலும் பல
இன்றைய, கிரைம், ரவுண்ட் அப், today, crime, round up,


இந்திய நிகழ்வுகள்



பண மோசடி வழக்கில் கவுதம் தாப்பர் கைது

புதுடில்லி-டில்லியின் அவந்தா குழும நிறுவன அதிகாரி கவுதம் தாப்பர் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

டில்லி மற்றும் மும்பையில் செயல்படும் அவந்தா குழும நிறுவனங்கள் 'யெஸ்' வங்கியில் 1 900 கோடி ரூபாய் கடன் வாங்கின. இந்த கடன்களில் சலுகை தளர்வு மற்றும் தள்ளுபடியுடன் மேலும் பல கடன்களை யெஸ் வங்கி வழங்கியது.இதற்காக அந்நிறுவனத்திற்கு சொந்தமாக டில்லியில் இருந்த ஒரு சொத்தை சந்தை மதிப்பை விட குறைந்த விலைக்கு யெஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராணா கபூர் வாங்கியதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ராணா கபூர் அவரது மனைவி பிந்து மற்றும் அவந்தா குழும நிறுவன நிர்வாகி கவுதம் தாப்பர் 60 ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.இந்த சம்பவத்தில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லி மற்றும் மும்பையில் கவுதம் தாப்பருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.முடிவில் நேற்று முன்தினம் இரவு கவுதம் தாப்பர் கைது செய்யப்பட்டார்.

இடி, மின்னல் தாக்கி மண விழாவில் 16 பேர் பலி -

டாக்கா-வங்கதேசத்தில், மின்னல் தாக்கி, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பேர் பரிதாபமாக பலியாயினர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் மழை பெய்து வருகிறது.

இதுவரை மழைக்கு 20 பேர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், ஷிப்கன்ஜ் நகர் அருகேயுள்ள ஆற்றில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சிலர் படகில் சென்றுஉள்ளனர்.வழியில் கன மழை, இடி, மின்னல் காரணமாக, படகை கரையோரம் நிறுத்திவிட்டு, அருகில் இருந்த கட்டடத்திற்குள் நுழையச் சென்றனர்.அப்போது, எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து தோன்றிய பயங்கர மின்னல்கள் தாக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில், அதிர்ஷ்டவசமாக மாப்பிள்ளை சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். மணப்பெண் தனியிடத்தில் இருந்ததால், அவரும் உயிர் தப்பினார்.இந்த சம்பவம், வங்கதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அங்கு, 2016ல், ஒரே நாளில் 82 பேர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி பலியாயினர்.வங்க தேசத்தில், காடுகள் அழிக்கப்படுவ தால், மின்னல் தாக்குதலில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இதையடுத்து, வங்கதேச அரசு, ஆயிரக்கணக்கான பனை மரங்களை நடும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


தமிழக நிகழ்வுகள்

சிவகாசி ஏ.டி.எம்.,ல் திருடிய பெண்

சிவகாசி:சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 58, விளாம்பட்டி ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க சென்றார். பணம் எடுத்து தர அருகில் நின்ற பெண்ணிடம் கூறி உள்ளார். பாஸ்வேர்ட் நம்பரை தெரிந்து கொண்ட அப்பெண் வேற ஒரு ஏ.டி.எம்., கார்டை கொடுத்து, உங்கள் கார்டு வேலை செய்யவில்லை. வங்கியில் சென்று கேளுங்கள் என்று கூறி அனுப்பினார். அதற்குள் அப்பெண் ரூ.40 ஆயிரம் எடுத்து தப்பினார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news



நடுக்கடலில் தீ பிடித்து படகு சேதம்

நாகர்கோவில்:கன்னியாகுமரியை சேர்ந்த சகாய அந்தோணி என்பவரது விசைப்படகில் 14 பேர் நேற்று முன்தினம் அதிகாலை கடலுக்கு சென்றனர்.

நள்ளிரவில் திரும்பி வந்த போது சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து நான்கு கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் இஞ்ஜின் பகுதியில் தீ பிடித்தது. தீயை கட்டுப்படுத்த முடியாததால் 14 பேரும் கடலில் குதித்து அவ்வழியாக வந்த மற்றொரு படகில் ஏறி கரை சேர்ந்தனர். காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி படகு முழுவதும் எரிந்தது. மீன்வளத்துறை அதிகாரிகளும், கன்னியாகுமரி போலீசாரும் விசாரிக்கின்றனர்.

முதியவருக்கு 5 ஆண்டு சிறை

தேனி:தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்தவர் முனிசாமி, 61; கூலித்தொழிலாளி. இவர், 2019 ஜூன் 29ல் அதே பகுதியைச் சேர்ந்த 6 - 9 வயதுடைய இரண்டு சிறுமியரை ஏமாற்றி பலாத்காரம் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன், 'முனிசாமிக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்


latest tamil news


நாட்டு வெடிகுண்டு வீச்சு கோவில் பூசாரி படுகாயம்

சேலம்:நாட்டு வெடிகுண்டு வீச்சில், பூசாரி படுகாயம் அடைந்தார். வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்யக் கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மல்லுாரைச் சேர்ந்தவர் வினோத்குமார், 32. தற்போது, ஜாகீர் அம்மாபாளையத்தில் வசிக்கும் இவர், குலதெய்வ கோவில் பூசாரியாக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு வீடு அருகே வினோத்குமார், நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார்.அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வினோத் குமாரின் பைக் மீது ஒரு குண்டை வீசினர். வினோத்குமார் வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. மற்றொரு குண்டை அவரது நண்பர் வீட்டின் மீது வீசினர். அது சுவரில் பட்டு வெடித்து சிதறியது.


latest tamil news


நிர்வாணமாக பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்

தஞ்சாவூர்:நடுரோட்டில் இளைஞர்கள் நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பல்வேறு கல்லுாரிகளில் படிக்கும் வெளியூர் இளைஞர்கள், தஞ்சாவூர் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் இரவு நேரங்களில் மது, கஞ்சா என சகல போதை பொருட்களுடன் உற்சாகமாய் பொழுதை கழிப்பது, கண்மூடித்தனமாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக, 'டூ - வீலர்' ஓட்டுவது போன்ற அடாவடி செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.அப்பகுதியினர் பலமுறை எச்சரித்தும், கண்டு கொள்ளவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன், 15க்கும் மேற்பட்ட கல்லுாரி இளைஞர்கள், நண்பர் ஒருவரின் பிறந்தநாளை நள்ளிரவில் கொண்டாடினர். அப்போது, மது போதையில் இருந்தவர்கள், பிறந்தநாள் நண்பரின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாகி, கேக் வெட்டக் கூறி, பிறந்த நாள் கொண்டாடி உள்ளனர். மேலும் சாலையில் செல்பவர்களை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மல்லுார் தனியார் மருத்துவமனையில், வினோத்குமார் அனுமதிக்கப்பட்டார். சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவ், வினோத் குமாரிடம் விசாரித்தார். தடய அறிவியல் துறை போலீசார் ஆய்வு செய்தனர்.வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்ய கோரி, நேற்று காலை 8:00 மணிக்கு, மல்லுார் - வீரபாண்டி சாலையில், மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை ஏற்று, 9:30 மணிக்கு மக்கள் கலைந்து சென்றனர்.வெடிகுண்டு வீசியவர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பாம்புடன் சண்டை 3 நாய்கள் இறப்பு

சிதம்பரம்-சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வரகூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராதா. இவரது வீட்டை சுற்றி புதர்கள் மண்டிக்கிடிப்பதால், பாதுகாப்பிற்காக ஏராளமான நாய்களை வளர்த்து வருகிறார்.இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் நல்ல பாம்பு ஒன்று வந்துள்ளது. இதனை கண்ட மூன்று நாய்கள் பாம்பை சூழ்ந்து கொண்டு, சண்டையிட்டுள்ளன. பாம்பும் சளைக்காமல் நாய்களிடம் சண்டையிட்டது.அதில், பாம்பு மூன்று நாய்களையும் கொத்தியது. நாய்களும் பாம்பை கடித்து குதறின. அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒன்றன் பின், ஒன்றாக நாய்கள் சுருண்டு விழுந்து இறந்தன. காயமடைந்த பாம்பும் இறந்தது.இதனால் நாய் உரிமையாளரின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், பாம்பையும், நாய்களையும் பார்க்க திரண்டதால் பரபரப்பு நிலவியது. பின்., அதே பகுதியில் பாம்புடன், நாய்களும் சேர்த்து புதைக்கப்பட்டன.

4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்' கள்ளக்குறிச்சி போலீஸ் அதிரடி

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நான்கு பேர் நேற்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, எலவனாசூர்கோட்டை பகுதியில், தொடர் திருட்டு; சிறுமி கடத்தல் வழக்கில் எஸ்.மலையனுார் அய்யப்பன், 22, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அதேபோல், கஞ்சா பயிரிட்ட சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் அய்யாகண்ணு, 59; கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மணலுார்பேட்டை அடுத்த பள்ளச்சந்தல் பகுதியைச் சேர்ந்த அய்யர், 42; தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். திருநாவலுார் அடுத்த பெரியப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்,40; அதே ஊரைச் சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.இவர்கள், 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்.பி.,ஜியாவுல்ஹக் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஸ்ரீதர், நான்கு பேரையும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள நான்கு பேருக்கும் வழங்கப்பட்டது.

தேனீக்கள் கொட்டி 40 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே கோவிலில் பொங்கல் வைத்தபோது தேனீக்கள் கொட்டியதில் 40 பேர் படுகாயமடைந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தநாடு பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் அங்குள்ள செல்லியம்மன் கோவிலில் நேற்று மதியம் 1:00 மணியளவில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.அப்போது கோவில் அருகே இருந்த தேன் கூட்டில் தேனீக்கள் கலைந்து பொங்கல் வைத்து வழிபாட்டில் இருந்த, இந்திரா, 39; கலியமூர்த்தி மகள் காவியா, 14; முருகன் மனைவி பச்சையம்மாள், 45; உட்பட 40 பேரை கொட்டியது.இதில் காயமடைந்த அனைவரும் திருநாவலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திலும், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் ; இருவர் கைது; 2 டன் பறிமுதல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற, இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி ஜோதிநகர் அமைதி நகரில், காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.ஐ., திருமலைசாமி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இருந்த காரை பரிசோதனை செய்த போது, 20 மூட்டைகளில் தலா, 50 கிலோ வீதம் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் கூறுகையில், 'கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்றோம். அங்கு கார் மட்டும் நின்றது.

அதில், இருந்த, ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரிக்கப்படுகிறது.இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.ஆனைமலைஅம்பராம்பாளையம் அருகே, குஞ்சிபாளையம் ரோட்டில் காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ஆனைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., கார்த்திக்குமார் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று வாகன சோதனை செய்தனர்.அதில், 18 மூட்டைகளில் இருந்த, ஒரு டன் ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர். கார் ஓட்டி வந்த கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த அஜ்மல், 18, என்பவரை, போலீசார் கைது செய்து, உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X