சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி, நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடந்து வரும், ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி பங்கேற்றார். முதல் சுற்றில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவி, பதக்கம் பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.
தமிழகம் திரும்பிய பவானிதேவி, நேற்று தலைமைச் செயலகத்தில், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்தார். அப்போது தன்னுடைய வாளை, முதல்வருக்கு பரிசாக வழங்கினார். அதை பெற்ற முதல்வர், அந்த வாள் அடுத்த முறை விளையாட உறுதுணையாக இருக்கும் எனக் கூறி, அதை மீண்டும் அவருக்கே வழங்கினார்.

முதல்வருடனான சந்திப்பு குறித்து, பவானிதேவி கூறியதாவது:ஒலிம்பிக்கில் நான் விளையாடியதை, முதல்வர் பார்த்து பாராட்டினார். இது என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி. தமிழகம் சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை மட்டுமல்லாமல், என் தாயையும், முதல்வர் பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, தமிழக அரசு எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் பல உதவிகளை செய்தார். மின்சாரத் துறையில் பணியாற்றி வருவதால், மின் துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளேன். மத்திய அரசிடம் இருந்து, பல்வேறு வாய்ப்புகள் வருகின்றன. எனினும், தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். ஒலிம்பிக் சென்றால், பதவி உயர்வு வழங்கப்படும். எனவே, பதவி உயர்வை எதிர்பார்க்கிறேன். தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என, முதல்வர் உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE