நடப்பு கணக்கு சிக்கலில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நடப்பு கணக்கு சிக்கலில் தள்ளாடும் சிறு நிறுவனங்கள்

Added : ஆக 05, 2021
Share
வங்கியில் உள்ள நடப்பு கணக்குகளை ஒழுங்கு படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை ஒன்று, சிறு தொழில்களைக் கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பல சிறு நிறுவனங்களின் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.இதற்கான காரணத்தை பற்றி, கோவையில் உள்ள பட்டயக் கணக்காளர் கார்த்திகேயன் கூறியதாவது:வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை
நடப்பு கணக்கு, சிக்கல்,சிறு நிறுவனங்கள்


வங்கியில் உள்ள நடப்பு கணக்குகளை ஒழுங்கு படுத்துவதற்கு ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை ஒன்று, சிறு தொழில்களைக் கடும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பல சிறு நிறுவனங்களின் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கான காரணத்தை பற்றி, கோவையில் உள்ள பட்டயக் கணக்காளர் கார்த்திகேயன் கூறியதாவது:வங்கிகளின் வாராக் கடனைக் கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி 2020 ஆகஸ்டில் ஒரு வழிகாட்டலை வெளியிட்டது. அதன்படி, ஒரு வங்கியில் 'கேஷ் கிரெடிட்' அல்லது 'ஓவர் டிராப்ட்' வசதி பெற்ற ஒரு நிறுவனத்துக்கு, நடப்பு கணக்கை ஆரம்பித்து தரக் கூடாது என, தெரிவிக்கப்பட்டது. தற்போதுள்ள சூழலைப் புரிந்துகொண்டால் தான் ரிசர்வ் வங்கியின் விதிகள் புரியும். ஒரு நிறுவனம், ஒரு வங்கியில் கடனை வாங்கியிருக்கும். இன்னொரு வங்கியில் நடப்பு கணக்கை வைத்திருக்கும்.


திருத்தம்ஒருவேளை வங்கிக் கடனுக்கான தவணைத் தொகையை ஒழுங்காக செலுத்த முடியாமல், அது வாராக் கடனாகக் கூட மாறலாம். ஆனாலும், வேறொரு வங்கியில் வைத்திருக்கும் நடப்பு கணக்கின் மூலம், வழக்கமான பரிவர்த்தனைகளை, அந்த குறிப்பிட்ட நிறுவனம் மேற்கொண்டு வரும்.கடன் கணக்கு ஓரிடத்திலும், நடப்பு கணக்கு ஓரிடத்திலும் இருப்பதால், வாராக் கடன் பிரச்னையை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது. இதை மாற்றுவதற்கே தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.கடன் வைத்துள்ள வங்கி யிலேயே நடப்பு கணக்கும் வைத்திருக்கும்போது, நடப்பு கணக்கில் காசோலையோ, இதர வரவுகளோ கணக்கு வைக்கப்படும்போது, கடனில் ஏதேனும் நிலுவை இருக்குமானால் அதற்கு ஈடான பணத்தை வசூல் செய்து விடலாம்.


திண்டாட்டம்இங்கே தான் சிரமம் ஆரம்பித்தது. பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு வங்கிகளில் நடப்பு கணக்குகள் வைத்திருக்கும் நிறுவனங்கள் உண்டு. மொத்த கடன் தொகையில் 10 சதவீதத்துக்கு மேல் கடன் கொடுத்துள்ள வங்கிக் கிளையில் மட்டுமே நடப்பு கணக்கைத் தொடர வேண்டும். மற்ற வங்கிகளில் உள்ள நடப்பு கணக்குகள் மூடப்பட வேண்டும் எனும்போது, சிறு நிறுவனங்கள் திண்டாடிப் போய் விடுகின்றன.ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் கடன் வைத்துள்ள நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி வைத்துள்ள ஒட்டுமொத்த மத்திய பட்டியலோடு ஒப்பிட்டு, அதில் அதிக கடன் கொடுத்த வங்கிக்கு, நடப்பு கணக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஐந்து கோடி ரூபாய்க்கு கீழே வர்த்தகம் செய்யும் சிறு நிறுவனங்கள் விஷயத்தில், வங்கிகள் அந்த வாடிக்கையாளரது, 'சிபில் ஸ்கோர்' போன்ற 'கிரெடிட் ரேட்டிங்'கைப் பார்த்து, அதில் எந்த வங்கி கூடுதலாக கடன் கொடுத்துள்ளதோ, அங்கேயே நடப்பு கணக்கை மாற்ற வேண்டும்.


latest tamil newsஇன்னொரு பிரச்னையையும் பார்க்கிறேன். ஒரு சில நிறுவனங்கள் இரண்டு, மூன்று மாநிலங்களில் செயல்படும். ஒரு மாநிலத்தில் உள்ள வங்கியில் ஏற்கனவே கடன் மற்றும் நடப்பு கணக்கு இருக்கும். அடுத்த மாநிலத்தில் காசோலைகளை வசூல் செய்ய மட்டும் நடப்பு கணக்கு இருந்தால் போதும். இனி, அங்கே போய் தனியே நடப்பு கணக்கை துவங்க முடியாது. தற்போது கடனுள்ள வங்கியின் மற்றொரு மாநிலக் கிளையில் போய் நடப்பு கணக்கோடு, கடனை யும் நாட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது.


குழப்பம்பல சமயங்களில் சிபில் ஸ்கோர் விபரங்கள் முறையாக, 'அப்டேட்' செய்யப்படுவதில்லை. அதனால், பல கடன்கள் நிலுவையில் இருப்பதாகவே காட்டுகிறது. இதனாலும், எந்த வங்கிக்கு நடப்பு கணக்கை நகர்த்துவது என்பதில் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.நிறுவனங்களின் வாராக் கடன் பிரச்னையைத் தீர்ப்பதற்கு இது உகந்த வழியல்ல. நிறுவனங்களின், 'பான்' எண் இருக்கிறது. ஜி.எஸ்.டி., எண் இருக்கிறது.


எளிமைஇதையெல்லாம் ஒருங்கிணைத்து, எங்கே கடன் இருக்கிறது; எங்கே நடப்பு கணக்கு இருக்கிறது; காசோலைகள் எங்கே பரிமாறப்படுகின்றன. எப்படி நிலுவைத் தொகையை வசூல் செய்வது என்றெல்லாம், ரிசர்வ் வங்கியோடு இணைந்துள்ள நிதி நிர்வாக மென்பொருளைப் பயன்படுத்தி எளிமைப்படுத்தி இருக்கலாம். தற்போது, சிறு நிறுவனங்களின் நடப்பு கணக்குகள் முடக்கப்பட்டுள்ள தால், அவர்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திணறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, நேற்று இந்த புதிய விதியை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது, ரிசர்வ் வங்கி.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X