புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது... மெல்ல மூடியது கதவு! வர்த்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு| Dinamalar

தமிழ்நாடு

புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது... மெல்ல மூடியது கதவு! வர்த்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு

Updated : ஆக 06, 2021 | Added : ஆக 06, 2021
Share
திருப்பூர்:மாவட்டத்தில், தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை கடைகளை அடைக்க வியாபாரிகள் தயாராக இருந்தனர்.அதே நேரம், மாலை, 5:00 மணிக்கு யார் முதலில் கடை மூடுவார்கள் என, புதுமார்க்கெட் வீதி, குள்ளிசெட்டியார், துளசிராவ் வீதியில் ஒவ்வொரு
 புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தது... மெல்ல மூடியது கதவு! வர்த்தர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு

திருப்பூர்:மாவட்டத்தில், தொற்று பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முதல் காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும் என கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மாலை கடைகளை அடைக்க வியாபாரிகள் தயாராக இருந்தனர்.அதே நேரம், மாலை, 5:00 மணிக்கு யார் முதலில் கடை மூடுவார்கள் என, புதுமார்க்கெட் வீதி, குள்ளிசெட்டியார், துளசிராவ் வீதியில் ஒவ்வொரு கடைக்காரர்களும் வெளியே வந்து பார்த்து கொண்டிருந்தனர். 5:05 மணிக்கு பின், ஓரிருவர் கடை ஷட்டரை கீழ்நோக்கி இழுக்க, மற்றவர்கள் கடை பூட்டும் சத்தம் அடுத்தடுத்து கேட்டது. காமாட்சியம்மன் கோவில் வீதி, முனிசிபல் ஆபீஸ் வீதி கடைகள், 5:10 க்கு மூடப்பட்டது.நேரு வீதி, ரயில்வே ஸ்டேஷன் சந்திப்பில் உள்ள துணிக்கடையில் வாடிக்கையாளர் நின்றிருந்தனர்.

அவர்களை உள்ளே அழைத்து அரைஷட்டருடன் கடைகள் செயல்பட்டன. வாடிக்கையாளர் நிறைந்திருந்ததால், காதர்பேட்டை மொத்த, சில்லறை விற்பனை கடைகள், 5:15 க்கு பின் மூடப்பட்டது.

மாலை, 5:20க்கு குமரன் ரோடு, வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டது ரோந்து வாகனம். போலீசார் ஒருவர் மைக்கில்,' ஏப்பா... துணிக்கடை, உங்களுக்கு மணி இன்னமும் அஞ்சு ஆகலையா... அஞ்சு மணிக்கு பூட்ட சொன்னா? அதுக்கு அப்றம் யாாபாரம் பண்ணா என்ன அர்த்தம். கடையை சீல் வெச்சிருவோம்,' என எச்சரித்தார். இருப்பினும், துணிக்கடைக்குள் வாடிக்கையாளர் செல்வதும், திரும்புவதுமாக இருந்தனர்.கோர்ட் வீதி - குமரன் ரோடு சந்திப்பில்,' நீங்க ஷட்டர் இழுத்து கடையை பூட்டும் வரை இங்கிருந்து நாங்க கிளம்ப மாட்டோம்,' எனக் கூறிய போலீசார், 'சைரனை' ஒலிக்க விட, பின் கடை மூடப்பட்டது.

குமரன் ரோடு, கரூர் வைஸ்யா வங்கி சந்திப்பு அருகே வந்த போலீஸ்காரர்,' ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா வந்து சொல்லணுமா; ஷட்டரை மூடுங்க; இல்லை நடவடிக்கை தான்,' என எச்சரிக்க, வாடிக்கையாளரை வெளியேற்றி கடைகளை மூடினர்.முன்கூட்டியே...கடைகளில் பணியாற்றுவோர் வீடு திரும்புவதால், வழக்கமாக இரவு, 7:00 மணிக்கு பின் டவுன், சர்வீஸ் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகரிக்கும். 'பீக்ஹவர்ஸ்' இரவு, 9:00 மணி வரை தொடரும். நேற்று கடைகள் மாலை, 5:00 க்கு மூடப்பட்டதால், முன்கூட்டியே பீக்ஹவர்ஸ் துவங்கியது. முக்கிய சந்திப்புகளில் நெரிசல், 5:30 மணிக்கே பஸ்களில் கூட்டம் காணப்பட்டது.கலெக்டர் ஆபீசில், தொற்று அபாயம்திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மூன்றாவது அலையை தடுக்க வேண்டுமெனில், முதலில் அரசு அலுவலகம், சேவை மையங்களில், தேவையின்றி கூட்டம் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில், நுாற்றுக்கணக்கான மக்கள், சமூக இடைவெளி இல்லாமல் கூட்டம் சேர்வதை தடுக்க வேண்டும்.மக்கள் நேரில் வருவதை தடுக்கும் வகையில், 0421 2969999 என்ற எண்களுடன், திங்கள்கிழமை தோறும் குறைகேட்பு நடத்துவது குறித்து, அறிவிப்பு மற்றும் பிரசாரம் செய்ய வேண்டும்.கலெக்டர் அலுவலக வளாகத்தில், கைகளை சுத்தம் செய்ய 'சானிடைசர்' வழங்குவது, கை கழுவும் வசதி ஆகியவை முடங்கி விட்டது. தமிழக அரசு அறிவித்துள்ளபடி, மாவட்ட அளவில், கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து, முறையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்பது தன்னார்வலர்களின் கோரிக்கை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X