
தோற்றதும் நமது ஹாக்கி வீராங்கனைகள் மைதானத்தில் அழுததைப் பார்த்த போது அவர்கள் விளையாட்டை மட்டுமல்ல தேசத்தையும் எவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்பது தெளிவானது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் அதிகம் கவனம் ஈர்த்தவர்கள் நமது ஹாக்கி வீராங்கனைகளே
பல ஆயிரம் கோடி ரூபாயை கொட்டினாலும் விளையாட்டை முழு நேரமும் ஏற்க தயங்கும் வீரர்களைக் கொண்ட தேசமாகவே நம் தேசம் இப்போதும் இருக்கிறது

காரணம் கிரிக்கெட்டைத்தவிர வேறு எந்த விளையாட்டை விளையாடினாலும் கால்வயிற்றுக்கஞ்சிக்கு கூட தேறமாட்டோம் என்ற பயம்

வீரர்கள் நிலையாவது பராவாயில்லை வீராங்கனைகள் நிலை இன்னும் மோசம் குடும்ப தடை பொருளாதார தடை என்று பல தடைகளை தாண்டி ஸ்டிக்கை பிடிப்பது என்பது சிரமமான காரியமாகவே இருந்தது.

ஏ பிரிவில் இடம் பெற்றிருக்கும் சில வீராங்கனைகளின் கதை மிகவும் சோகமானது ஹாக்கி ஸ்டிக் வாங்குவதற்காக விவசாய கூலி வேலை செய்தவர்,காதணியை விற்றவர்கள் எல்லாம் உண்டு.பயிற்சியின் போது இரு வேளை நல்ல உணவு தருவீர்களாமே என்று கேட்டு வந்தவர்களும் உண்டு.

இருந்தும் ‛சக்தேவ்' படத்தில் வரும் ஷாருக்கான் போல உங்களால் முடியும் உங்களால் மட்டுமே முடியும் என்று இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளர் ஸ்ஜேர்ட் மரிஜ்னே வீராங்கனைகளிடம் சொல்லி சொல்லியே அணியை தயார் செய்திருந்தார்.
என்ன செய்து என்ன பயன் இவர்கள் லீக் போட்டியைக் கூட தாண்டமாட்டார்கள் பாப்போமா? பந்தயம் வைத்துக் கொள்வோமா? என்றெல்லாம் உற்சாகத்தை வடிக்கும்படியாக நம்மவர்களே இகழ்ந்தனர் அதற்கேற்ப முதல் மூன்று போட்டிகளிலும் இவர்கள் தோற்க நான்தான் அப்பவே சொன்னேன்ல என்பது போல எள்ளல் அதிகரித்தது.
ஆனால் கொஞ்சமும் நம்பிக்கையை கைவிடாத பயிற்சியாளர், தோல்வியில் இருந்து பாடம் படியுங்கள் நீங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள் உங்கள் தேசத்தின் பெருமையை உங்கள் தோள்களும் கால்களும் ஸ்டிக்குகளும் தாங்கி நிற்கின்றன என்றெல்லாம் சொன்னது மந்திர வார்த்தையாக மாற அடுத்தடுத்த வெற்றி பெற்றனர். சொந்த அக்கா தங்கைகளின் ஆட்டத்தை பார்ப்பது போல டி.வி..முன் தேசம் திரண்டது.அதிலும் இந்த முறை தங்கம் தட்டிச் செல்லும் அணி என்று கணிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் இனிப்பு வழங்கி கொண்டாடியது.
அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் தோற்ற போது கூட நீங்கள் ஆஸ்திரேலியாவையே வென்றவர்கள் என்று சொல்லி தேற்றினர்.வெண்கலபதக்கத்திற்கான விளையாடிய போது நமது வீராங்கனைகளின் வேகத்திற்கும் வேர்வைக்குமாகவாவது வெற்றி கிடைக்கவேண்டும் என்ற பிரார்த்தித்தனர்.
வெற்றியும் கைக்கெட்டிய துாரத்தில்தான் இருந்தது நமது அணி கோல்கீப்பர் சவீதா இரும்புச் சுவராக இருந்த எதிரணி அடித்த பல கோல்களை தடுத்து திருப்பி அனுப்பினார்.கடைசி நிமிடம் வரை துடிப்புடன் விளையாடியும் இங்கிலாந்து அணி ஒரு கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வியால் துவண்டு போன நம் வீராங்கனைகள் மைதானத்திலேயே அழுதனர் நாட்டிற்கு எப்படியும் ஒரு பதக்கத்தை சமர்ப்பித்து விடுவோம் என்ற நம்பிக்கை தகர்ந்து போனதை எண்ணி எண்ணி அவர்கள் கண்கள் கலங்கின.
உண்மையில் நமது வீராங்கனைகள் தோற்கவில்லை இந்தியர்கள் அனைவரது இதயங்களையும் வென்று உள்ளனர் லட்சக்கணக்கான சிறுமிகளின் மனதில் ஹாக்கி விளையாட்டின் மீது கவனத்தை திருப்பியுள்ளனர் ஹாக்கி விளையாட்டிற்கு ஒரு பெருமையை சேர்த்துள்ளனர் அடுத்து பெறப்போகும் தங்க பதக்கத்திற்கு ஆழமான விதையை ஊன்றியிருக்கின்றனர்
தாயகம் திரும்பும் போது அவர்களை மனதார வரவேற்போம் வாழ்த்துவோம்
-எல்.முருகராஜ்.