கோவை: கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோவை மாநகராட்சியில் நிறைவேற்றிய, 2,886 தீர்மானங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் முறைகேடு செய்திருப்பதாக குற்றம் சுமத்திய தி.மு.க.,வினர், இப்போது 'கப்-சிப்' என இருக்கின்றனர்.
தமிழகத்தில், 2016, அக்., 25ல் உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிந்தது. அதன்பின், தேர்தல் நடத்த ஏற்பாடு நடந்தபோது, இட ஒதுக்கீடு பிரச்னையால் தடைபட்டது.கோர்ட் உத்தரவிட்டதும், முதல்கட்டமாக, ஊராட்சிகளில் மட்டும் நடத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் தேர்தல் நடத்தாததால், கமிஷனராக இருப்பவர்களே, தனி அலுவலர் பொறுப்பை கூடுதலாக கவனித்து, மாமன்ற கூட்டத்தை நடத்தி, தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.

கடந்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், 2016, நவ., முதல், 2021, மே வரை, 53 மாதங்களில், மாநகராட்சி கமிஷனர்களால், 72 கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதில், 2,886 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.விஜயகார்த்திகேயன் கமிஷனராக இருந்தபோது, 39 கூட்டங்கள் நடத்தி, 1,404 தீர்மானங்கள், ஷ்ரவன் குமார் பதவியில் இருந்தபோது, 22 கூட்டங்களில், 922 தீர்மானங்கள், குமாரவேல் பாண்டியன் காலத்தில், 11 கூட்டங்களில், 560 தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. 2016 நவ., முதல், 2017, ஜூன் வரையிலான தீர்மானங்கள், மாநகராட்சி இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டன.
குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும், பல கோடி ரூபாய் மதிப்புக்கு, 'டெண்டர்' வழங்குவது வெளிச்சத்துக்கு வந்ததால், அதன்பின் தீர்மானங்கள் பதிவேற்றம் செய்வது நிறுத்தப்பட்டது. பல்வேறு தரப்பில் அழுத்தம் கொடுத்தும், அவை வெளியிடப்படாமல், ரகசியமாக பாதுகாக்கப்பட்டன.இவ்விஷயத்தில் மூக்கை நுழைத்த, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக், 'மாநகராட்சி நிர்வாக செயல்பாடு, வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருக்கிறது. பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன. மறைக்கப்பட்ட தீர்மானங்களை, வெளிப்படையாக பதிவேற்றம் செய்ய வேண்டும்' என, அறிக்கை வெளியிட்டார். அப்போதும், மாநகராட்சி நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை.
வெளிவந்தன தீர்மானங்கள்!
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கமிஷனராக பொறுப்பேற்ற ராஜகோபால், கடந்த அ.தி.மு.க., காலத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டார்.அதன்படி, 2017, நவ., முதல், 2021, மே வரை நடந்த, 58 கூட்டங்களில் நிறைவேற்றிய, 2,241 தீர்மானங்கள் பதிவேற்றப்பட்டன.இதில், குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும், பல கோடி ரூபாய்க்கு பணிகள் ஒதுக்கியது; அரசின் ஒப்புதல் பெற்று செய்ய வேண்டிய, பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணியை, தனித்தனியாக பிரித்து, உள்ளூர் நிறுவனத்தினருக்கு வழங்கியது உள்ளிட்ட, பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.ஜே.என்.என்.யு.ஆர்.எம்., பிரிவுக்கு நியமித்த அலுவலர்களை முறைகேடாக, ரெகுலர் அதிகாரிகளாக மாற்றியது; அப்பிரிவு அதிகாரிகளுக்கு பதவி கொடுத்து, சம்பள உயர்வு வழங்கியது உள்ளிட்ட, நிர்வாக ரீதியான தவறுகளும் தெரியவந்தன.
ஓ...அப்படியா சங்கதி!
ஏகப்பட்ட தவறுகள், முறைகேடுகள் நடந்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ள சூழலில், எந்தெந்த நிறுவனத்துக்கு எத்தனை கோடி ரூபாய்க்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; என்னென்ன முறைகேடு நடந்திருக்கிறதென பட்டியலிட்டு, தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய தி.மு.க.,வினர், இப்போது மவுனமாக இருப்பது, பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுகிறது.
ஆய்வு செய்யணுமாம்!
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக்கிடம் கேட்டபோது, ''ஒவ்வொரு தீர்மானத்தையும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. வேலைகள் செய்த இடத்தை, நேரடியாக சென்று பார்க்க வேண்டியுள்ளது. முறைகேடு நடந்திருப்பதை ஆய்வு செய்து, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE