புதுடில்லி-பல்வேறு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விருப்பமா அல்லது தீர்ப்பாயங்களை மூட திட்டமா என்பது குறித்து பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

அமித் சஹானி என்ற வழக்கறிஞர், தேசிய மற்றும் பிராந்திய ஜி.எஸ்.டி., தீர்ப்பாயங்களை அமைக்கவும், தீர்ப்பாயங்களில் காலி பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:ஆயுத படைகள் தீர்ப்பாயம், தேசிய பசுமை தீர்ப்பாயம், ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் போன்ற அமைப்புகளில் நீதி மற்றும் நீதி சாரா உறுப்பினர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட 15 தீர்ப்பாயங்களில் இன்னும் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. தேர்வுக் குழு உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் பரிந்துரைத்தவர்களையும் நியமிக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் பணியிடங்களை நிரப்புவது குறித்து பதில் அளிக்க வேண்டும்.

இல்லையெனில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும். பணியிடங்களை நிரப்பாத காரணத்தை தெரிவிக்க, உயரதிகாரிகளுக்கு 'நோட்டீஸ்' அனுப்புவோம். அவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். அதுபோன்ற நிலைக்கு அமர்வை தள்ள வேண்டாம். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி தீர்ப்பாயங்களை நடத்த விருப்பமா அல்லது அவற்றை மூட திட்டமா என்பது குறித்து, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE