சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மீண்டும் சிலுவையில் இயேசு!

Added : ஆக 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மீண்டும் சிலுவையில் இயேசு!கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம், நம் மீது தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கிறிஸ்துவர்களாகிய நாம் 'ஷூ'க்கள் அணிகிறோம்...'நாம் வணங்குகிற தெய்வம் உயிரோடு இருக்கிறது என்றால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நாய்களும், புழுக்களும் கடித்து


மீண்டும் சிலுவையில் இயேசு!கு.காந்திராஜா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம், நம் மீது தொற்றிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கிறிஸ்துவர்களாகிய நாம் 'ஷூ'க்கள் அணிகிறோம்...'நாம் வணங்குகிற தெய்வம் உயிரோடு இருக்கிறது என்றால், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நாய்களும், புழுக்களும் கடித்து சாவார்கள்...' இப்படியெல்லாம் பேசியிருப்பது சாலையில் போகிற யாரோ ஒருவர் அல்ல; கன்னியாகுமரியை சேர்ந்த ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்துவ பாதிரியார்!மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை என்பதெல்லாம் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை தான் என்ற உண்மையை, அவரது பேச்சு தெளிவாக நிரூபித்திருக்கிறது.ஹிந்துக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு கீழே போகும் பகுதிகளில், இவரை போன்ற மதவெறி பிடித்தோர் தான் தேர்தல் முடிவை நிர்ணயிப்பர். அங்கெல்லாம் மத அடிப்படை அரசியல் தான் மேலோங்கியிருக்கும்.
இவரது இந்த மோசமான மதவெறி பிடித்த பேச்சுக்கு, மதச்சார்பற்ற அரசியல் கட்சி எனக் கூறி கொள்ளும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., போன்றவை எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது அக்கட்சிகளின் முகமூடியை கிழித்தெறிந்துள்ளது.அவரது பேச்சு, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கிற எச்சரிக்கை. மத மாற்றம் என்பது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதையும், அவர் உணர்த்தியுள்ளார்.'மத மாற்றத்தால் இது உங்கள் தாய் நாடு அல்ல' என கிறிஸ்துவர், முஸ்லிம்களுக்கு அவர் பாடம் நடத்தியுள்ளார்.பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு கால ஆட்சியில் முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு கிடைக்காத என்ன சலுகைகள், ஹிந்துக்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன என்பதை யாராவது விவரிக்க தயாரா?உண்மையில், இந்த நாட்டில் பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு கிடைக்காத சலுகைகள் கிறிஸ்துவர் மற்றும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.கிறிஸ்துவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா போன்றோரின் உண்மையான நோக்கம், மத மாற்றத்தின் மூலம் இந்தியாவை கிறிஸ்துவ நாடாக மாற்ற வேண்டும் என்பது தான்.அதற்கு பிரதமர் மோடி ஆட்சியில் நிறைய தடைகள் இருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். அதற்காக தான், பிரதமர் மோடி மீது இத்தனை குரோதத்துடன் இருக்கின்றனர்.உண்மையான கிறிஸ்துவ, முஸ்லிம்கள், அந்த பாதிரியாரின் மதவெறி கருத்துகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஹிந்துக்களுக்கும் மத சுதந்திரம், உரிமைகள் இருக்கின்றன என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.மதவெறி பிடித்திருக்கும் ஜார்ஜ் பொன்னையா போன்றோர், தங்கள் செயல்களின் மூலம் இயேசுவை மீண்டும் சிலுவையில் அறைகின்றனர்.


அஞ்சாதீர் காங்கிரசாரே!நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'நீட்' தேர்வு விஷயத்தில் யார் மீது பழியை துாக்கி போடுவது என தெரியாமல், தி.மு.க., அரசு திணறுகிறது.'நீட் தேர்வுக்கு காங்கிரஸ் மற்றும் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., ஆகியோர் தான் காரணம்' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.இதற்கு காங்கிரசால், தைரியமான பதிலடியை கொடுக்க முடியவில்லை. தி.மு.க.,வுக்கு பதில் சொல்ல வேண்டும்; அதே நேரம், அக்கட்சியை பகைத்து கொள்ளக் கூடாது என்பதற்காக, 'தடவி' கொடுத்தது போல பதில் அளித்திருக்கிறார், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் சந்திரசேகரன்.'நீட் தேர்வை அமல்படுத்த முயன்றது காங்., - தி.மு.க., கூட்டணி அரசு தான். ஆனால் மாநிலங்கள் தகுந்த காரணங்களைச் சொல்லி விலக்கு கோரினால் சில காலத்திற்கு விலக்கு அளிக்கலாம் என்ற ஷரத்தும் அதில் இருந்தது'
என்கிறார்.நீட் நுழைவு தேர் வை அமல்படுத்த விரும்பினோம் என, காங்கிரஸ் உறுதியாக சொல்ல வேண்டும். அதில் தவறு இல்லை. 'உயிர் காக்கும்மருத்துவத்தை, தகுதியான மாணவர்கள் தான் பயில வேண்டும்' என, அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.'நாங்கள் அறிமுகப்படுத்திய நீட் தேர்வை தான், தற்போதைய பா.ஜ., அரசு தொடர்கிறது' என கூறினால், பாரம்பரிய காங்கிரசுக்கு அது பெருமை அளிக்கும்.முன்னாள் பிரதமர் ராஜிவை கொன்ற கொலையாளிகளை விடுதலை செய்வதில் காங்கிரசுக்கு விருப்பமில்லை என சொல்வதற்கு கூட, அஞ்சுகின்றனர்.அற்ப அரசியல் காரணங்களுக்காக, தங்கள் தலைவரை கொலை செய்தோரை கண்டு காங்கிரசார் பம்முகின்றனர்.அஞ்சி அஞ்சியே, தமிழகத்தில் காங்கிரஸ் தேய்ந்துவிட்டது!


அண்ணாமலையின் பிரம்மாஸ்திரம்!எஸ்.பழனிவேல், திருமாளம், திருவாரூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., - எம்.பி.,க்களில் தயாநிதி மாறன், பொதுவெளியில், 'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா...' என்பது போல அதிரடியாக பேசி, சர்ச்சையில் சிக்கிகொள்கிறார். அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வர் நிவாரண நிதி கோரிய அப்போதைய முதல்வர் இ.பி.எஸ்.,சை, 'மக்களிடம் பிச்சை எடுக்கிறார்' எனக் கேவலமாக பேசினார்.தி.மு.க., ஆட்சி வந்ததும், முதல்வர் ஸ்டாலினும், 'நிவாரண நிதி கொடுங்கள்' எனகேட்டார். தயாநிதி முன்பு பேசிய பேச்சு, சமூக வலைதளங்களில் மீண்டும் பரவி, அவருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது.தயாநிதி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போது, தங்கள் 'டிவி' நிறுவனத்திற்காக விதிமீறி தொலைதொடர்பு துறையை பயன்படுத்தி பலனடைய செய்தார். இதனால், பி.எஸ்.என்.எல்.,லுக்கு நஷ்டத்தை உண்டு பண்ணினார்.
சமீபத்தில், மேகதாது அணை தொடர்பாக தன் கண்டனத்தை தெரிவித்திருந்தார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை.உடனே தயாநிதி களத்துக்குள் புகுந்து, 'மாவீரன் அண்ணாமலையை துாதராக கர்நாடகத்துக்கு அனுப்பலாம்' எனக் கேலியாக பேசினார்.அதற்கு அண்ணாமலை, 'நான் செல்ல தயார்; சிறப்பு விமானத்தை கொடுங்கள்... இங்குள்ள விவசாயிகளை கர்நாடகா அழைத்து செல்கிறேன். அப்படியே உங்கள் மாமா ஸ்டாலினிடம்
அனுமதி வாங்கி கொடுங்கள்' என, சிறப்பான பதிலை தந்தார்.மறுக்க மற்றும் மறக்க முடியாத அளவுக்கு அண்ணாமலையிடம் இருந்து ஒரு பிரம்மாஸ்திரம் வருமென, தயாநிதி எதிர்பார்த்திருக்க மாட்டார்.செய்த வினை திரும்ப வந்து நிச்சயம் தாக்கும்.


தே.மு.தி.க., காணாமல் போகும்!அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தே.மு.தி.க., உருவாக காரணமே, தி.மு.க., தலைவர் கருணாநிதி தான்.நடிகர் விஜயகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணத்தை பல வழிகளில் அசையும், அசையா சொத்துக்களில் முதலீடு செய்தார். அதில் கோயம்பேடு ஆண்டாள் அழகர் திருமண மண்டபமும் ஒன்று.சென்னை கோயம்பேடில் மேம்பாலம் அமைப்பதற்காக அந்த மண்டபத்தின் குறிப்பிட்ட பகுதியை, தி.மு.க., அரசு இடித்தது.'விட்டேனா பார்...' என்ற கோபத்தில் விஜயகாந்த் உருவாக்கியது தான், தே.மு.தி.க., என்ற கட்சி. இது மக்களை காக்க உருவாகவில்லை; தன் சொத்து மீது கை வைத்ததால் வந்த கோபத்தால் உருவானது.கட்சி அமைத்ததால், கொள்கையும் வெளியானது. அதில் பல நல்ல கொள்கைகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, 'ஆண்டவன் மற்றும் மக்களுடன் மட்டும் தான் கூட்டணி' என்ற அறிவிப்பு, பெரும் வரவேற்பை பெற்றது.திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தே.மு.தி.க., பார்க்கப்பட்டது என்பதும் உண்மை. அடுத்தடுத்த தேர்தல்களில், அக்கட்சிக்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்தது.வளர்ந்து வரும் நிலையில், தன் கொள்கையை மறந்து, அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து, சட்டசபை எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தும் தே.மு.தி.க.,விற்கு கிடைத்தது.கட்சிக்குள் குடும்ப ஆதிக்கம் அதிகரித்தது. திராவிட கட்சிகளுக்கு மாற்று தே.மு.தி.க., அல்ல என்ற எண்ணம் மக்களிடம் உருவாகி விட்டது. அதனால் அக்கட்சியின் தேய்பிறை ஆரம்பமானது.உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., சேர
உள்ளதாம். இதை, தன்மானமுள்ள எந்த தே.மு.தி.க., தொண்டரும் ஏற்று கொள்ளவே மாட்டார்கள்.தி.மு.க., உடன் கூட்டணி என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி உள்ள தே.மு.தி.க.,வை காணாமல் போக செய்யும்.


'டாஸ்மாக்' வருமானம் மடை மாறுமா?கோ.மங்கையர்க்கரசி, மணவாள நல்லுார், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுது கிறார்: காவிரி நீரை பங்கிட்டு தருவதில், கர்நாடக அரசு நமக்கு காலம் காலமாக துரோகம் செய்து வருகிறது.தற்போது, 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம்' என, கர்நாடக அரசு ஒற்றை காலில் நிற்கிறது.காவிரிக்கான உரிமை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இருக்கிறது. அதில் நீர் பாசன பரப்பு, தமிழகத்தில் தான் அதிகம்.தற்போதைய சூழ்நிலையில் தன்னிச்சையாக அணையை கட்ட முடியாது. இது தெரிந்தும், எதிர்வரும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்காக அங்குள்ள அரசியல்வாதிகள், மேகதாது அணை விஷயத்தை கையிலெடுத்து பிரச்னையை கிளப்புகின்றனர்.காவிரியில் நமக்கான உரிமையை பெற்றாக வேண்டும். பேச்சு நடத்தியோ, சட்ட நடவடிக்கை மூலமாகவோ, நம்
உரிமையை வென்றெடுக்க வேண்டும்.அதே நேரத்தில், 'டாஸ்மாக்' மது விற்பனை மூலம் ஆண்டிற்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம், தமிழக அரசுக்கு கிடைக்கிறது.விவசாயி, கூலி தொழிலாளி, நடுத்தர உழைக்கும் வர்க்கத்தினர், செல்வந்தர் என அனைத்து தரப்பு மக்களும் மது அருந்துகின்றனர். அதன் மூலமாக தான் இவ்வளவு வருமானம், தமிழக அரசுக்கு வருகிறது.நல்லது, கெட்டது என எது நடந்தாலும், மது குடித்து கொண்டாடும் பழக்கம், தமிழர்களிடைய வேரூன்றி விட்டது.டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை, விவசாயத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தலாமே!ஏரி, குளம் என அனைத்து நீர்நிலைகளையும் துார் வாரி, முறையாக பராமரிக்கலாம். தமிழகத்தில் பொழியும் மழை நீரை முழுமையாக சேகரிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம்.விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை பாதுகாக்க தானிய சேமிப்பு நிலையங்களை ஊராட்சி தோறும் அமைக்கலாம். இப்படி டாஸ்மாக் வழியாக கிடைக்கும் வருமானத்தில், மக்களுக்கு நல்லது செய்யலாமே... அரசு நடவடிக்கை எடுக்குமா?


வாருங்கள் மாணவர்களே... ஒரு கை பார்ப்போம்!மரிய ஜூலியன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்தில் நடக்கும், 'நீட்' தேர்வு அரசியலால் பெரிதும் பாதிக்கப்படுவது நம் மாணவர்களே.தமிழக அரசு, 'குழு அமைக்கிறோம், விவாதம் நடத்துகிறோம், கடிதம் எழுதுகிறோம்' என மாணவர்களை குழப்பாமல், நீட் தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.அவர்களின் அறிவாற்றல் வளர வேண்டும்; எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டும் என எண்ணத்திலாவது, அவர்களை ஊக்குவிக்கலாமே?மாணவர்களே, பெற்றோரே... இந்த அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி, அலட்சியமாக இருந்து விடாதீர்கள். நம் பிள்ளைகளுக்கு தவறான நம்பிக்கையை வளர்த்து விட வேண்டாம்.நம் பிள்ளைகள் அறிவாற்றலில் குறைந்தவர்களா என்ன?அனைத்து மாணவர்களும் 'டியூஷன்' சென்று தான், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனரா? அரசு பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றதில்லையா?
தனியார் பள்ளியில் சிறப்பாக கல்வி கற்பிக்கப்படுகிறது; அரசு பள்ளியில் அப்படியில்லை எனக் கூறுவது, தமிழக அரசுக்கு அவமானம் இல்லையா?அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எத்தனையோ கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் அள்ளி கொடுத்தும், அவர்களால் தரமான கல்வி கற்பிக்க முடியவில்லை என்றால், குற்றம் யார் மீது?அரசு பள்ளி மாணவ - மாணவியரின் கல்வி தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களின் பங்கை முழுதுமாக உபயோகப்படுத்துவதில், தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கும் போது, தமிழகம் மட்டும் பயந்து ஒதுங்குவது, பகுத்தறிவு ஆகாது!எந்த மாநிலத்திற்கும், தனியார் பள்ளிக்கும், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் குறைந்தோர் இல்லை என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக, நீட் தேர்வை கருதலாமே!அச்சமில்லை மாணவர்களே... வாருங்கள் நீட் தேர்வையும் ஒரு கை பார்ப்போம்!

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
08-ஆக-202106:25:41 IST Report Abuse
D.Ambujavalli நீட் தேர்வு என்னும் ஆள்விழுங்கி பாம்பு என்ற பிம்பத்தை காட்டி மாணவர்களைக் காப்பாற்றிவிடுகிறோம் என்று வெட்டி கூச்சல், ‘இதோ நடவடிக்கை எடுத்துவிட்டோம்’ என்று மாதம் ஒருமுறை மத்திய அரசுக்கு ஓலை அனுப்பி நாடகம் ஆடுபவர்களை மாணவர்களும், பெற்றோரும் மறந்து வெகு நாளாகிவிட்டது அவர்கள் ஐந்தாண்டு, பத்தாண்டு க்காலம் கூவிவிட்டு போய்விடுவார்கள் நம் எதிர்காலத்தை நாம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று தெளிவாகவே இருக்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X