நாமக்கல்:தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவமனையில், 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார். அவரது மகள் மித்ரா. அவர், தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி போட வேண்டும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.அதையடுத்து, பொதுமக்கள் வழங்கிய நன்கொடை மூலம், சிறுமிக்கு ஊசி மருந்து போடப்பட்டது.
இது குறித்து, சிறுமி மித்ராவின் தந்தை சதீஸ்குமார் கூறியதாவது:எங்கள் மகள் மித்ரா, தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். அவரது சிகிச்சைக்காக, ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. அதன் விலை, 16 கோடி ரூபாய்.
அந்த ஊசியை, இந்தியாவில் இறக்குமதி செய்ய, ஆறு கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம், 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது.
பொதுமக்கள் கொடுத்த பணம் மருந்துக்கு மட்டுமே போதுமனதாக இருந்தது. இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே, இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்தது.
பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள், அதிகாரிகள் மனது வைத்து, இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். கடவுள் அருளால், மத்திய அரசு, இறக்குமதி வரியான, ஆறு கோடி ரூபாயை ரத்து செய்தது.
அதற்கான கடிதம், இணையதளம் மூலம் அனுப்பி வைத்தனர். நேற்று, எங்கள் மகள் மித்ராவுக்கு, பெங்களூரு மருத்துவனமனையில் ஊசி மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாட்களில், சிகிச்சைக்கு பின், ஊர் வந்துவிடுவோம். எங்கள் மகள் வாழ உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE