உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்திராதது, நம் தமிழகத்தில் தான் நடந்துள்ளது; அதுவும், கடந்த நுாறு ஆண்டுகளுக்குள் தான் நடந்துள்ளது. அவ்வாறு நடந்தது என்ன என்பது, பெரிய குற்றமாகவே இங்கு பார்க்கப்படவில்லை என்பது தான் வேதனை.
ஆம், கோவில் சொத்துக்களை கொள்ளையடித்தது, ஆக்கிரமித்ததைத் தான் சொல்கிறேன்.ஓர் அங்குல இடத்தை கூட, உடன் பிறந்த அண்ணன், தம்பிக்கு விட்டுக் கொடுக்காமல் சண்டையிட்டு, நீதிமன்றங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். அது தொடர்பான மோதல்களில் சண்டையிட்டு, சிறைச்சாலைகளில் வாடுகின்றனர்; சொந்த பந்த உறவுகளை மறந்து எதிரிகளாக மாறி விடுகின்றனர்.
வருமானம்
ஆனால், நம் கோவில் சொத்துக்களை, பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக தன் வசப்படுத்திக் கொண்டு உள்ளனர். அதற்கு எந்த வருத்தமும் அவர்கள் படுவதில்லை. 'கோவில் சொத்து குலநாசம்' என்பதை அறிந்தும், 'நான் கும்பிடும் சாமி, என்னை ஒன்றும் செய்யாது' என்ற எண்ணத்தில், கோவில் சொத்துக்களை பலரும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.
சிலர், பெரிய கோவில்களையே இடித்து தரைமட்டமாக்கி, அந்த இடத்தில் கட்டடங்களைக் கட்டிக் கொண்டுள்ளனர். அதற்கு வசதியாக, வருவாய் நில அளவைப் பிரிவில், கொடுக்க வேண்டியதை கொடுத்து தங்கள் பெயரில் பட்டா மாற்றிக் கொண்டுள்ளனர்.இன்னும் சிலர், கோவில் வாசலை மறைத்து கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கின்றனர்.
இன்னும் பலர், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பயிரிட்டு, அறுவடையின் போது குறிப்பிட்ட அளவு நெல் அல்லது விளைச்சலை கோவிலுக்கு கொடுக்கிறேன் என, சாமி பெயரில் சத்தியம் செய்து வாங்கி, பல ஆண்டுகள் அப்படி கொடுத்து, அதன்படி 50 - 60 ஆண்டுகளாக எதையும் கொடுப்பதில்லை. நன்கு தெரிந்தே, கோவில் இடத்தில் உள்ள கட்டடத்தில் வாடகைக்கு இருக்கின்றனர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நிர்ணயிக்கப்பட்ட 50, 100 ரூபாய் வாடகையை கூட, பல ஆண்டுகளாக கொடுக்காமல் ஏமாற்றி, சுவாமிக்கே பட்டை நாமம் போடுகின்றனர்.
அந்த காலத்தில், கோவில் இல்லாத ஊரை பார்க்கவே முடியாது. அந்த ஊரில் உள்ள அனைவரும் தங்கள் பங்குக்கு, கோவிலுக்கு என்ன செய்ய முடியுமோ அதை நிலமாகவோ, பொருட்களாகவோ, பணமாகவோ, உடல் உழைப்பாகவோ கொடுத்தனர். அதனால் கோவில்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொத்துக்கள் சேர்ந்து, அந்த ஊரின் பெரிய பணக்காரராக அந்த ஊர் சுவாமி தான் இருந்தார்.
அந்நிலை, அதாவது சுவாமி மீதான பற்று, பக்தி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, கோவில் சொத்துக்களை கொள்ளையடிக்கத் துவங்கி விட்டனர். கடவுள் இல்லை என்பது ஏதோ ஈ.வெ.ரா., வந்த பின் தான் என, நினைத்து அவரை பின்பற்றிய பலர் இந்த கொள்ளைக்கு துணை போயினர்.ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கடவுள் இல்லை என சொன்னவர்களையும் கோவில் கோபுரங்களில் சிலைகளாக வைத்து வழிபட்டது ஹிந்து மதம். கோவில்கள், சுவாமிகள், பூஜாரிகள் மீதான பயம் போகத் துவங்கியதும், கோவில் சொத்துக்களை அபகரிக்கும் எண்ணமும் வரத் துவங்கி விட்டது. பிற மதங்களின் சொத்துக்களை இவ்வளவு தைரியமாக அனுபவிக்காதவர்கள், ஹிந்து கோவில் சொத்துக்களை, தங்கள் சொந்த சொத்துக்களாக ஆக்கிக் கொண்டனர்.
இதை தட்டிக் கேட்பவர்களை எட்டி பேசினர். சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு, அரசுகள் அவர்களுக்கு சாதகமாக போனதால், ஹிந்து கோவில்களின் சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல, பிற நாடுகளில் இல்லை.
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் உள்ள மசூதிகளின் சொத்துக்களை அங்குள்ளவர்களோ, பிறரோ யாரும் கை வைக்க முடியாது. கை வைத்தால் உயிர் பறிக்கப்பட்டு விடும். அந்த அளவுக்கு அங்கு சட்டங்கள் வலுவாக இருக்கின்றன.
தண்டனை
அங்குள்ள வழிபாட்டுத் தலங்களின் இடங்களை பலர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். எனினும், வாடகை பாக்கியோ, குத்தகை ஒப்பந்தத்தை மீறுவதோ அங்கு நடப்பதே இல்லை. ஒருவேளை மீறினால், கிடைக்கும் தண்டனை அடுத்தவரை கதிகலங்க வைத்து விடும்.
மலேஷியாவில் 'கிராண்ட்' என, ஒரு வரைபடம் உள்ளது. அது, அசையா சொத்துக்களின் வரைபடம். எந்த எண்ணுக்கு உரிய சொத்து அது; அதன் உட்பிரிவு என்ன; அது உற்பத்தியான ஆண்டில் இருந்து யார் யாரிடம் இருந்தது; எப்போது கை மாறியது என்பதை, கம்ப்யூட்டர் காலத்துக்கு முன்பிருந்தே துல்லியமாக வைத்து இருக்கின்றனர்.இன்றும் அதன்படி தான் சொத்துக்கள் கை மாறுகின்றன. பொதுச்சொத்தாக இருந்தாலும், பழமையான சொத்தாக இருந்தாலும், தனியார் சொத்தாக இருந்தாலும், கிராண்ட் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
இதுபோல நம் கிராமங்களிலும், கிராம முன்சீப் வசம், அவர் கைப்பட எழுதி வைத்திருந்த சொத்துப் பட்டியல் இருந்தது. அந்த பட்டியல், அவரின் தந்தை, அவருக்கும் தந்தை காலத்தில் தயாரித்ததாக இருக்கும். அதில் அவ்வப்போது மாற்றம் செய்து பக்காவாக வைத்திருந்தனர். கிராம முன்சீப் பதவி வேண்டாம் என நினைத்து, அவர்களை வீட்டுக்கு போகச் சொன்னதும் அந்த பட்டியலும் போய் விட்டது. அடாவடித்தனத்துக்கு பயந்து, அதுபோன்ற அற்புத பதிவேட்டை கோட்டை விட்டு விட்டோம்.
கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்தவர்கள், கோவில் சிலைகளை திருடி, பிற நாடுகளின் மியூசியங்களுக்கு விற்றவர்கள் பலர். அவர்களுக்கும், திருடர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் கிடையாது. கோவில்களின் அரிய சிற்பங்களையும், கைவினைப் பொருட்களையும் விற்று காசு பார்த்தவர்கள், நம்மிடம் தான் இப்போதும் உலவிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முதல் காரணம், சுவாமி மீதான பயம் போய் விட்டது தான். அதை போக்கடித்தவர்கள் யார் எனப் பார்த்தால், பல கட்சித் தலைவர்களை பட்டியலிட வேண்டியிருக்கும். வேண்டாம்.'தெய்வம் நின்று கேட்கும்' என்பது தெரியாமல், கோவில்களில் திருடியோர் என்றாவது ஒரு நாள் எப்படியாவது அகப்பட்டு தான் தீருவர் என்பதை தர்மமும், சட்டமும் சொல்வதுடன், செய்தும் தான் காட்டுகின்றன.
கோவில் சொத்துக்கள், கடைகள், மனைகள், திருமண மண்டபம் இவைகளை கபளீகரம் செய்யத் துணிந்தவர்கள் அன்றும் இருந்தனர்; இன்றும் தொடர்கின்றனர்.முதலில் அப்படிப்பட்ட அநியாயக்காரர்களை அசுரன் என கூறினர். அடுத்த காலக் கட்டத்தில் வில்லன் என அழைத்தனர். இப்போது பல பெயர்களில் அவர்கள் உலாவுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர் கோவில் வாசலில் பெரிய போர்டு வைத்திருந்தனர். கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்திருப்பவர்கள், குடி இருப்பவர்களின் வாடகை பாக்கி விபரம் தான் அந்த போர்டு. அந்த போர்டில், வாடகை பாக்கி வைத்தவர்களின் பெயர், நிலுவைத் தொகை போன்ற விபரங்கள் இருந்தன. அதுபோல, பல கோவில்களின் வாசல்களில் அந்த பட்டியல் பின்னர் வைக்கப்பட்டது. பல இடங்களில் அந்த பட்டியல் பலனும் தந்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறையினர் வாடகை பாக்கியை கேட்டனர்; வக்கீல் 'நோட்டீஸ்' விட்டனர். கடைக்காரர்கள் ஒன்றுக்கும் அசையவில்லை. இப்படி, போர்டு வைத்த பின், மானத்திற்கு பயந்து நிலுவைத் தொகையை சிலர், கொஞ்சமாக செலுத்த துவங்கினர். ஆனாலும் ஒரு சிலர், 'எங்களிடம் சொல்லாமல் அவர்களாக வாடகையை உயர்த்தி விட்டு, இப்போது கூடுதலாக வாடகை கேட்டு போர்டு வைத்துள்ளனர்' என, சப்பைக்கட்டு கட்டினர். அந்த குற்றாலநாதருக்கு மட்டும் தான் உண்மை தெரியும். அதுபோல, வாடகைக்கு வாங்கியவர்களுக்கும் தெரியும். உண்மை உள்ளிருந்து அரித்துக் கொண்டே தான் இருக்கும். உண்மை எப்போதும் உறங்காது.
இதுபோல பல ஊர்களில் உதாரணங்கள் உள்ளன. சிவகங்கை கோவில் இடத்தில் 11 ஏக்கரை பட்டா மாற்றி, அதில் கட்டடம் கட்டி பல ஆண்டு களாக அனுபவித்தனர். இப்போது அந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கட்டடத்தை இடித்து, அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பொய் முகங்கள்
இதுபோன்ற முறைகேடுகளை எந்த அரசியல் அழுத்தமும், அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் இல்லாமல் சமூகத்தின் கண்களுக்கு காட்ட வேண்டும். பொய் முகங்களை தோலுரித்தால் அடுத்து இப்படி நடப்பது கொஞ்சமாவது குறையும்.
காஞ்சிபுரத்தின் பக்கத்தில் ஒரு பள்ளி 99 ஆண்டுகள் குத்தகை முடிந்ததும் கோவில் கட்டடத்தை ஒப்படைக்கவில்லை. பள்ளியை தற்போது அரசே ஏற்று நடத்துகிறது. அந்தப் பாக்கி நிலுவைத் தொகை என்ன ஆனது; எந்தச் செய்தியும் இல்லை. அதில் ஏதும் உள்குத்து நடந்து இருக்குமோ என்பதும் புரியவில்லை.
ஸ்ரீரங்கம் கோவிலின் பரப்பு, ஆவணப்படி 320 ஏக்கர் என சொல்லப்படுகிறது. ஆனால் இன்று இருப்பது 22 ஏக்கர் என சொல்லப்படுகிறது. இந்த முறைகேடுகள் எத்தனை ஆண்டுகளாக நடந்தனவோ?ஸ்ரீரங்கம் அருகே திருவெள்ளரை கோவில் சொத்துக்களை அபகரிப்பவர்களை அகற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையிட, குற்றவாளிகளை காவல் துறை காப்பாற்றியதும், அந்த விவகாரம் ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் வரை போய் முடிவுக்கு வந்ததும் அதிர்ச்சி தகவல் தானே.
கோவில் சொத்தில் கை வைத்தவர்கள் கதி என்ன என்பதை நானே பல முறை கண்டுள்ளேன். மொத்தம் மொத்தமாக சாவு, பெற்ற மகன் திருமணத்திற்கு வர முடியாத அளவுக்கு 'கோமா' நிலைக்கு போனவர்கள் பலர். கொரோனா காலத்தில் இறந்தவர்களில் பலரின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் பட்ட அவதி போன்றவற்றின் பின்னணியில், கோவில் சொத்து; குலநாசம் என்ற வார்த்தை மறைந்துள்ளது. ஆனாலும் அவர்களின் குடும்பம் இன்னும் திருந்தியதாகத் தெரியவில்லை.
எத்தனையோ தீர்த்தவாரி குளங்கள் வீட்டு மனைகள் ஆகி விட்டன. தனியார் கல்லுாரிகளைச் சுற்றி இருந்த கண்மாய்கள் சுருக்கப்பட்டு, அவற்றின் மேல் 'காம்பவுண்டு' சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதை கண்டிப்பவர்களும் இல்லை; கண்டித்தவர்களும் இல்லை. எனவே, அரசு தான் இதில் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில், சர்வ அதிகாரம் படைத்தது அரசுகள் மட்டுமே. கோவில் சொத்துக்களை அபகரித்தவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களிடம் இருந்து அந்த சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்.
கோவில் கட்டடங்களில் குடியிருப்பவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய பணத்தை, வட்டியும், முதலுமாக சேர்த்து வசூலிக்க வேண்டும். ஆபத்பாந்தவன் போல இப்போது வந்துள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், அவ்வப்போது வேகம் காட்டுகிறார். அவர் அப்படியே தொடர்ந்து செயல்பட வேண்டும். கோவில்களின் சொத்துக்கள் மீட்கப்பட வேண்டும்.
பல நாடுகளின் மியூசியங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நம் கோவில் அருஞ்சிற்பங்கள், சுவாமிகள் சிலைகள் மீண்டும் நம் நாட்டுக்கு எடுத்து வரப்பட வேண்டும். அப்படி எடுத்து வரப்பட்டவற்றை, பாதுகாப்பு இல்லை என கூறி, மீண்டும் இருட்டறைகளில் வைத்து பூட்டாமல், மக்களை வழிபடச் செய்ய வேண்டும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள், தாங்களாகவே முன்வந்து சமர்ப்பிக்க வேண்டும். அத்தகையவர்களுக்கு சில சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும்!
சீத்தலை சாத்தன்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ --மெயில்: send2subvenk@gmail.com
மொபைல்: 98424 90447
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE