புதுடில்லி: டில்லியில் தலித் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்., முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட பதிவை நீக்கி 'டுவிட்டர்' சமூக வலைதளம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்., தெரிவித்துள்ளது.
டில்லியின் நாங்கல் பகுதியில், 9 வயது தலித் சிறுமி சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை நேரில் சந்தித்து ராகுல் ஆறுதல் கூறினார். இது தொடர்பான படத்தை 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டிருந்தார். 'போக்சோ சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளியிடக் கூடாது. பெற்றோரின் படத்தை வெளியிட்டதன் வாயிலாக ராகுல் சட்டத்தை மீறி உள்ளார். அந்த பதிவுகளை உடனே நீக்க வேண்டும்' என, டுவிட்டர் நிறுவனத்துக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பான தேசிய கமிஷன் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து ராகுலின் பதிவுகளை நீக்கி டுவிட்டர் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் காங்., கட்சியின் அதிகாரப்பூர்வ, டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ராகுலின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதை மீண்டும் பயன்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராகுலை அவரது மற்ற சமூக வலைதள கணக்குகளில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE