புதுடில்லி :டில்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாதுகாப்பு நடவடிக்கையாக செங்கோட்டையை சுற்றிலும் சரக்கு பெட்டகத்தாலான அரண் அமைக்கப்பட்டுள்ளது.
டில்லியில் கடந்த குடியரசு தினத்தன்று, பஞ்சாப் விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது வன்முறை வெடித்ததை அடுத்து, 394 போலீசார் படுகாயம் அடைந்தனர். போராட்டக்காரர்கள் வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் ஏறி, சீக்கிய அமைப்பின் கொடியை ஏற்றினர். வரும் 15ல் சுதந்திர தின விழா நடக்கவுள்ளதை அடுத்து, இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும் செங்கோட்டையை சுற்றி, 'கன்டெய்னர்' எனப்படும் சரக்கு பெட்டகங்கள் அரண் போல வைக்கப்பட்டுள்ளன.
'இதனால், சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி, நாட்டு மக்களிடம் உரையாற்றுவதை, வெளியில் இருந்து யாரும் பார்க்க முடியாது' என, டில்லி போலீசார் தெரிவித்தனர்.முதன் முறையாக செங்கோட்டையில் இத்தகைய சரக்கு பெட்டக சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின விழாவையொட்டி, டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம், பாரா கிளைடர்கள், பலுான்கள் ஆகியவற்றை பறக்க விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி செங்கோட்டைக்கு பின்புறம் பறந்த குட்டி விமானம் ஒன்றை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE