மதுரை:திருக்குறள் புத்தகம் விற்பனை வாயிலாக, மதுரை தனியார் நிறுவனம், 65.46 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், அதன் சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, முதலீட்டாளர்களுக்கு வழங்க, அரசுக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுரை, சின்ன சொக்கிகுளம் அஜ்மல்கான் ரோட்டில், 'பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்' நிறுவனம் செயல்பட்டது. '10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, 100 திருக்குறள் புத்தகங்கள் வாங்க வேண்டும்; 37வது மாதத்தில், 46 ஆயிரத்து 900 ரூபாய் முதிர்வு தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.இதை நம்பி, 45 ஆயிரத்து 501 பேர், 65.46 கோடி ரூபாய் முதலீடு செய்தனர். இதை முதலீட்டாளர்களுக்கு தராமல், நிறுவனத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன், கவுஸ் சர்தார் ஹூசைன், ஷானு ஷேக், கவுஸ் யாகூப் ஹூசைன், பானு ஆகியோர் தங்கள் சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றி, அசையும், அசையா சொத்துக்கள் வாங்கினர்.பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் 2010ல் மோசடி வழக்குப் பதிந்தனர். ஷேக் முகைதீன் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர். அவர், 2005ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.மோசடி வழக்கை விசாரித்த மதுரை முதலீட்டாளர் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்ற - டான்பிட் -நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு:முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், எதிர்மனுதாரர்கள் மனுக்கள் மேல் மனு தாக்கல் செய்துள்ளனர். முதலீட்டாளர்களின் பணத்தில் எதிர்மனுதாரர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது.சொத்துக்களை ஜப்தி செய்ய, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. நிறுவனத்தின் வாகனங்கள், அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் விற்று, பணத்தை முதலீட்டாளர்களுக்கு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.