மேட்டூர்:நீர்வரத்து அதிகரிப்பால் கர்நாடகா அணைகளில், 11 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 2,095 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 1,969 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு, 14 ஆயிரத்து, 500 கனஅடி நீர் வெளியேற்றுவதால், நேற்று முன்தினம், 78.40 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 77.26 அடியாக சரிந்தது.கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தீவிரம் அடைந்த பருவமழையால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 14 ஆயிரத்து, 916 கனஅடியாக இருந்த கே.ஆர்.எஸ்., நீர்வரத்து, நேற்று, 21 ஆயிரத்து, 454 கனஅடியாக உயர்ந்தது. வினாடிக்கு, 6,879 கனஅடியாக இருந்த கபினி நீர்வரத்து, நேற்று, 11 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,000 கனஅடியாக இருந்த இரு அணைகளின் நீர்திறப்பு நேற்று, 11 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நீரின் ஒரு பகுதி நாளை வந்தடையும் என்பதால், மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிக்கும்.