மதுசூதனன் மறைவுக்கு பின், அவர் வகித்த, அவைத் தலைவர் பதவி, அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்பதவியை கைப்பற்ற, மூத்த நிர்வாகிகள் மத்தியில் போட்டி உருவாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் வரை, அ.தி.மு.க.,வில் அவைத் தலைவர் பதவி என்பது, பெயரளவுக்கான பதவியாக இருந்தது.
போட்டி

அவர் மறைவுக்கு பின், கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அவைத் தலைவர் பதவி முக்கியத்துவம் பெற்றது. கட்சியின் சின்னத்தை பெற, அவைத் தலைவர் எந்தப் பக்கம் இருக்கிறார் என்பது முக்கியம் என்ற, நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுசூதனனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எனவே, தற்போது அப்பதவியை பெற, பல தரப்பினர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
அந்த பதவியை எதிர்பார்க்கிற பொன்னையன், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்.,சும், அதே சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற சர்ச்சை வெடிக்கும் என்பதால், பொன்னையனுக்கு வாய்ப்பு இல்லை.
அன்வர்ராஜா, தமிழ்மகன் உசேன் ஆகிய இருவரும், சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பெயர்களும் பரிசீலிக்கப்படுகிறது. அதேநேரத்தில், மதுசூதனன், நாயுடு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால், அதே சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு என்றால், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் எம்.பி.,க்கள் டாக்டர் வேணுகோபால், டாக்டர் சரோஜா ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்கலாம் என்கின்றனர்.
வன்னியர் சமுதாயத்திற்கு முக்கிய பதவி வழங்கவில்லை என்ற அதிருப்தி, ஏற்கனவே நிலவுகிறது. அதனால், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செம்மலை, எம்.சி.சம்பத் பெயர்களும் அடிபடுகின்றன.
இப்படி மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நடக்க, மற்றொரு பக்கம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் போல, மீண்டும் ஒற்றைத் தலைமையை உருவாக்க, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் பட்டியல்
இதுகுறித்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பிளவுபட்டதும், இரட்டை இலை தொடர்பான வழக்கு, தேர்தல் கமிஷனில் நடந்தது. அதில் 'அவைத் தலைவர் மதுசூதன் தலைமையில் இயங்கும், அ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது' என, தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்ததால், அப்பதவிக்கு மவுசு உருவாகி உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் உட்கட்சித் தேர்தல் நடத்தி, தேர்தல் கமிஷனிடம், புதிய நிர்வாகிகள் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள், வழிகாட்டுதல் குழுவினர் என, பல்வேறு பதவிகளை வைத்து சந்தித்து, சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை.
உட்கட்சி தேர்தல்
எனவே, ராசி இல்லாத இந்த பதவிகளையும், தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் இப்பதவி முறைகளையும் நீக்கிவிட்டு, மீண்டும் ஒற்றை தலைமையை உருவாக்க, பா.ஜ., மேலிடத்திடம் ஏற்கனவே, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., விவாதித்துள்ளனர். அதில், தலைவர் பதவியை, ஓ.பி.எஸ்.,சுக்கும், பொதுச்செயலர் பதவியை இ.பி.எஸ்.,சுக்கும் வழங்கவும், இரட்டை இலை சின்னம் வழங்கும் அதிகார படிவத்தில், இருவரின் கையெழுத்தும் இடம் பெறும் வகையில், கட்சி விதிகளை மாற்றறவும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது,தொழிற்சங்க நிர்வாகிகள் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, விரைவில் உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -