புதுடில்லி:'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளை கலந்து போடுவது பாதுகாப்பானது; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது' என ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் தெரியவந்துள்ளது.
'கோவாக்சின்'
நம் நாட்டில் 'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' தடுப்பூசிகள் போடும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. உத்தர பிரதேசத்தின் சித்தார்த் நகர் பகுதியில் முதல் டோஸாக கோவீஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்ட 18 பேருக்கு கடந்த மே மாதம் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும்போது தவறுதலாக கோவாக்சின் போடப்பட்டது.
தடுப்பூசிகளை கலந்து போடுவதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை அறிய ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய தொற்று நோயியல் நிறுவனம் இணைந்து ஆய்வு நடத்தின.
அனுமதி
இதில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் போட்டுக் கொண்ட தலா 40 பேர் மற்றும் தடுப்பூசிகள் கலந்து போடப்பட்ட உ.பி. யை சேர்ந்த 18 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.இதில் தடுப்பூசிகள் கலந்து போடப்பட்டவர்களுக்கு உடல் ரீதியாக பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஒரே தடுப்பூசியை இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களை விட தடுப்பூசியை கலந்து போட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிக வீரியத்துடன் இருப்பது தெரியவந்தது. மேலும் 'ஆல்பா பீட்டா டெல்டா' வகை தொற்றுகள் மீது தடுப்பூசி கலப்பு அதிக செயல் திறனுடன் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து தடுப்பூசி களை கலந்து போட்டு சோதனை நடத்தும் பணியை மேற்கொள்ள வேலுார் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE