சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
பெயின்டருக்கு 'போக்சோ'புழல்: புழல் அடுத்த காவாங்கரை, திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் துரை, 50; பெயின்டர். இவர், தன் வீட்டருகே வசிக்கும் 7 வயது சிறுமிக்கு, நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து, மாதவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, அன்று இரவு துரையை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.விபத்தில் பெண் பலிதிருமங்கலம்:

பெயின்டருக்கு 'போக்சோ'
புழல்: புழல் அடுத்த காவாங்கரை, திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் துரை, 50; பெயின்டர். இவர், தன் வீட்டருகே வசிக்கும் 7 வயது சிறுமிக்கு, நேற்று முன்தினம் பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து, மாதவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, அன்று இரவு துரையை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.

விபத்தில் பெண் பலி
திருமங்கலம்: முகப்பேர் ஆறாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் மாரி ரமேஷ், 50. இவரது மனைவி ராஜா பாரதி, 43. கடந்த 2ம் தேதி மதியம், டி.வி.எஸ்., காலனி பிரதான சாலையில் இருந்து வீட்டிற்கு செல்ல, மாரி ரமேஷ் இருசக்கர வாகனத்தை இயக்க முற்பட்டார். வாகனம் பூட்டி இருப்பதை அறியாமல் அதை இயக்க முற்பட்டதால், பின்னே அமர்ந்திருந்த ராஜா பாரதி, நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

மொபைல் போன் பறித்தவர் கைது
செங்குன்றம்: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆரீப் ஷேக். இவர் செங்குன்றம் அடுத்த சி.ஆர்.பி., நகரில், ஏழு பேருடன் தங்கி, கட்டுமான வேலை செய்து வருகிறார். நள்ளிரவு இவர்களது வீட்டிற்குள் நுழைந்த இருவர், ஆரீப் ஷேக்கின் இரண்டு மொபைல் போன்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை திருடினர். ஆரீப் ஷேக் அவர்களை பிடிக்க முயன்றதில் ஒருவர் தப்ப, மற்றொருவர் சிக்கினார். அவரை செங்குன்றம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் புளியந்தோப்பைச் சேர்ந்த சூர்யா, 20, என்பதும், தப்பியவர் அவருடைய மாமா செல்வம் என்பதும் தெரிய வந்தது. சூர்யாவை கைது செய்த போலீசார், பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

பெண் படம் ஆபாசமாக சித்தரிப்பு
மதுரவாயல்: மதுரவாயலைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிற்கு தெரிந்த நபர், இவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இளம்பெண்ணின் 'ஐடி'யையும் இணைத்ததாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களை அகற்றுமாறு இளம்பெண் கேட்ட போது, அந்த நபர் ஆபாசமாக பேசி மிரட்டியுள்ளார். மன உளைச்சலால் இளம்பெண் தற்கொலை முடிவெடுத்துள்ளார். பெற்றோர் தடுத்து, மதுரவாயல் போலீசில் புகாரளித்தனர்.
மனநல நோயாளி ஓட்டம்
கீழ்ப்பாக்கம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர், 5ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள, மனநல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மதியம், அவரது மனைவி பொன்னியம்மாள், 38, வெளியே டீ வாங்க சென்றார். அந்நேரம், அவரது கணவர் மொபைல் போனை எடுத்து தப்பிச் சென்றார். இது குறித்த புகாரை அடுத்து, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

வாலிபருக்கு அடி, உதை
செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ், 29; கட்டுமான தொழிலாளி; இவரது மனைவி சகிலா. சுரேஷ் இரவு, குடிபோதையில் வீட்டிற்கு சென்றார். இதனால், தம்பதிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரத்தில், சுரேஷ், மனைவியை அடித்தார்.கோபித்துக்கொண்ட மனைவி, உறவினர் வீட்டிற்கு சென்றார். சுரேஷ், அவரை சமாதானப்படுத்தி அழைக்க சென்றார். அப்போது, அங்கிருந்த சகிலாவின் அண்ணன் உட்பட அவரது உறவினர்கள், சுரேஷை தாக்கினர். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

போலி நகையை அடகு வைத்தவர் கைது
அரும்பாக்கம்: அரும்பாக்கம் அடகு கடையில் நேற்று 34 வயது மதிக்கத்தக்கவர், 6 சவரன் நகையை அடகு வைக்க சென்றார். அப்போது நகையை வாங்கி கடையின் உரிமையாளர் பரிசோதனை செய்ததில், போலி நகை என தெரிய வந்தது. உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில் திருமுல்லைவாயலைச் சேர்ந்த சுரேந்தர், 34, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மோசடியில் ஈடுபட அவரை வலியுறுத்திய நபரை தேடி வருகின்றனர்.

முதல்வர் வீட்டு காவலுக்கு சென்றவர் காயம்
அசோக் நகர்: கே.கே.நகர் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணி புரிந்து வருபவர், சித்திவிநாயகம், 48. இவர், முதல்வர் வீட்டு பாதுகாப்பு பணிக்காக, நேற்று காலை இருசக்கர வாகனத்தில் சென்றார். அசோக் நகர் காவல் நிலையம் எதிரே உள்ள சிக்னலை கடக்க முயன்றபோது, இடது புறத்தில் இருந்து வந்த கார், அவர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட சித்திவிநாயகத்தின், இரண்டு கால் மற்றும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்த விசாரித்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய பாண்டி பஜார் தர்மா புரத்தைச் சேர்ந்த கமல்ராஜ், 42, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X