செஞ்சி : கெங்கவரம் ஏரியில் குப்பைகளைக் கொட்டுவதால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்கள் அசுத்தமாகி நோய் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. ஏரியில் குப்பை கொட்டுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செஞ்சி அடுத்த கெங்கவரம் ஏரி 75 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி மூலம் 100 ஏக்கர் அளவிற்கு விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஏரிக்கு இப்பகுதியில் உள்ள மிக பெரிய அளவிலான நிலப்பரப்பைக் கொண்ட கெங்கவரம் காட்டுப்பகுதியில் பெய்யும் மழைநீர் வருகிறது.இதனால் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் முதலில் நிறையும் ஏரியாக கெங்கவரம் ஏரி உள்ளது.
இங்கிருந்து வெளியேறும் உபரி நீரே அடுத்துள்ள கணக்கன்குப்பம், தாண்டவசமுத்திரம், தேவதானம்பேட்டை, துத்திப்பட்டு, நெல்லிமலை, பாடிபள்ளம், பொன்னங்குப்பம் ஏரிகளுக்குச் செல்கிறது.இந்த ஏரிகளின் உபரி நீர் நந்தன் கால்வாய் வழியாக பனமலை ஏரிக்குச் செல்கிறது. கெங்கவரம் கிராமத்திற்கு குடிநீர் எடுக்க ஏரியில் திறந்த வெளி கிணறு அமைத்து வருகின்றனர். கெங்கவரம் ஏரி தண்ணீர் செல்லும் மற்ற ஏரிகளில் உள்ள திறந்த வெளிகிணறுகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து வருகின்றனர்.
இப்படி சிறப்பு வாய்ந்த இந்த ஏரியில் குப்பைகளைக் கொட்டி சீர்கேடாக்கி வருகின்றனர்.கடந்த ஆண்டு வரை கெங்கவரம் கிராமத்தில் சேகரித்த குப்பைகளை சுடுகாட்டில் கொட்டி எரித்து வந்தனர். சில மாதங்களாக கெங்கவரம் ஏரியில் பள்ளம் எடுத்து குப்பைகளைக் கொட்டி எரித்து வருகின்றனர்.கிராமங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளுடன், கெங்கவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளையும் எடுத்து வந்து ஏரியில் கொட்டுகின்றனர்.
தற்போது தமிழகம் முழுதும் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கெங்கவரம் ஏரியில் கிராமத்தில் சேகரிக்கப்படும் முகக் கவசம் உள்ளிட்ட எல்லா பொருட்களையும் ஏரியில் கொட்டப்படுகிறது.அத்துடன், கிராமத்தில் மது அருந்துபவர்கள் பாட்டில்களை அதே இடத்தில் போட்டு உடைக்கின்றனர்.
குப்பைகளோடு கலந்து இவற்றையும் எடுத்து வந்து ஏரியில் கொட்டுகின்றனர்.இதனால் எதிர்காலத்தில் ஏரியில் கண்ணாடி துண்டுகள் அதிகரித்து ஆடு மாடு மேயப்பவர்களின் காலில் குத்தி காயம் ஏற்படுத்தும் அத்துடன் ஏரி நிரம்பும் போது ஏரியில் குளிப்பவர்களுக்கும் கண்ணாடி ஓடுகளால் காயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
ஏரியில் கொட்டப்படும் குப்பைகளால் நீர் நிறையும் போது குப்பையில் இருந்து வெளியேறும் அசுத்தமான நீர் ஏரி நீரில் கலந்து விடும். இதனால் கெங்கவரம் மட்டுமின்றி அடுத்துள்ள ஏரிகள் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே கெங்கவரம் ஏரியில் குப்பைக்கழிவுகள் கொட்டுவதைத் தடுத்து, மாற்று இடத்தில் குப்பைகளைக் கொட்டி அழிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE