வாஷிங்டன்: உலகம் முழுவதும் டெல்டா வகை கோவிட் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பரவல், அங்குள்ள மருத்துவ சுகாதார கட்டமைப்பை திணற வைத்துள்ளது.
டெக்சாஸ் மாகாண பொது சுகாதார மருத்துவ இயக்குநர் டெஸ்மர் வாக்ஸ் தெரிவித்து உள்ளதாவது:
மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினில் 24 லட்சம் பேர் வாழ்கின்றனர். இங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவ கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பேரழிவுக்கு வாய்ப்பு!
இங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 6ஆக குறைந்துள்ளது. சிகிச்சை அளிப்பதற்கு 313 செயற்கை சுவாச கருவி மட்டுமே தற்போது இருப்பு உள்ளது.
நிலைமை மோசமாக உள்ளது. பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என மக்களுக்கு குறுஞ்செய்தி, இமெயில், போன்கால்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE