பொது செய்தி

தமிழ்நாடு

அக்கா இறந்த தகவலை மறைத்து தங்கையை ஒலிம்பிக் அனுப்பிய தாய்

Added : ஆக 09, 2021
Share
Advertisement
திருச்சி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற வீராங்கனையிடம் அக்கா இறந்ததை மறைத்ததால், அவர் ஊர் திரும்பியபோது விமான நிலையத்தில் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 22. இவரது தந்தை சேகர் இறந்து விட்ட நிலையில், தாய் உஷா கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு, மூன்றாவது மகள் தனலட்சுமியை தடகள வீராங்கனை ஆக்கி உள்ளார்.

திருச்சி: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற வீராங்கனையிடம் அக்கா இறந்ததை மறைத்ததால், அவர் ஊர் திரும்பியபோது விமான நிலையத்தில் கதறி அழுதது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், குண்டூரைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 22. இவரது தந்தை சேகர் இறந்து விட்ட நிலையில், தாய் உஷா கூலி வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு, மூன்றாவது மகள் தனலட்சுமியை தடகள வீராங்கனை ஆக்கி உள்ளார். தமிழக தடகள அணியில் இடம் பெற்றிருந்த தனலட்சுமி, தேசிய போட்டியில் தங்கம் வென்றதால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். அவர், 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்றார். போட்டியில் இந்திய அணி தோற்றாலும், தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற திருப்தியில், நேற்று முன்தினம் இரவு, தனலட்சுமி விமானத்தில் திருச்சி வந்தார். அவருடன், ஒலிம்பிக்கில் பங்கேற்ற மற்றொரு தடகள வீராங்கனை சுபாவும் வந்தார். இருவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தனலட்சுமி, தன் அக்கா காயத்ரி, 31 என்பவரை தேடி உள்ளார். அதற்கு குடும்பத்தினர் வீட்டில் உள்ளார் என்றனர். ஆனால் உறவினர் ஒருவர், 'அக்கா இறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது' எனக் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, விமான நிலைய வாசலிலேயே மண்டியிட்டு கதறி அழுதார். தாய் உஷா, உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவு கூறியும் அவரை தேற்ற முடியவில்லை. தனலட்சுமி தாய் உஷாதான், மகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறி, நாட்டுக்காக மகள் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வழிவகுத்துள்ளார் என, உறவினர்கள் கூறினர்.

உஷா கூறியதாவது: எனக்கு மூன்று மகள்கள். இதில் தனலட்சுமி ஓட்டப்பந்தய வீராங்கனை ஆகிவிட்டார். மற்றொரு மகள் கஸ்தூரி, ஏழு மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். மூத்த மகள் காயத்ரி, 31 தான், தனலட்சுமியை ஊக்கப்படுத்தி, இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறி வந்தார். இதன்படியே, தனலட்சுமியும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாயப்பு பெற்றார். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் தனலட்சுமி பயிற்சியில் இருந்தார். இந்நிலையில் காயத்ரிக்கு கடந்த மாதம், 12ம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இது குறித்து, பயிற்சியில் உள்ள தனலட்சுமிக்கு தெரிவித்தால், அவர் கலங்கி விடுவார். ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போய்விடும் என்பதால், அவரிடம் சொல்லாமல் மறைத்து விட்டோம். 23ம் தேதி தனலட்சுமி டோக்கியா புறப்பட்டார். தனலட்சுமி, காயத்ரியை கேட்கும் போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி சமாளித்து வந்தோம். விமான நிலையத்தில் உண்மை தெரிந்து விட்டதால், தனலட்சுமி மனம் உடைந்து விட்டார். இவ்வாறு, அவர் கூறினார். தாய் உஷாவின் தேசபக்தியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X