சென்னை : 'தமிழக அரசின் மொத்தக் கடன், வரும் மார்ச், 31ல், 5.70 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். தனி நபர் கடன் சுமை, 1.10 லட்சம் ரூபாயாக உள்ளது. போக்குவரத்து, மின் வாரிய நிலைமை, மிகவும் மோசமாக உள்ளது' என, அரசின் நிதி நிலை பற்றிய வெள்ளை அறிக்கையில், நிதி அமைச்சர் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலைமையை விளக்கும், வெள்ளை அறிக்கையை, நேற்று நிதி அமைச்சர் தியாகராஜன், சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2013 - 14ம் ஆண்டுக்கு பின், தமிழகத்தின் நிதி நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. 2020 - 21ம் ஆண்டில் கொரோனா காரணமாக வீழ்ச்சி அதிகரித்துள்ளது. 2013 - 14ம் ஆண்டில் இருந்து, தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் பற்றாக்குறையில் உள்ளது. கடந்த, 2017 - 18 முதல், நிதி பற்றாக்குறையில், வருவாய் பற்றாக்குறையின் பங்கு, 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால், தற்போது நிதி பற்றாக்குறையின் அளவு, அதிகரித்துக் கொண்டே வருகிறது.
ஒட்டுமொத்த கடன்
அடுத்த ஆண்டு மார்ச், 31ல், ஒட்டு மொத்த நிலுவைக் கடன், 5 லட்சத்து, 70 ஆயிரத்து, 189 கோடி ரூபாயாக இருக்கும். மாநிலத்தின் ஒவ்வொரு குடிமகன் மீதும், 1.10 லட்சம் ரூபாய் கடன் உள்ளது. கடந்த நிதியாண்டில், மொத்த அரசு உத்தரவாதங்கள், ஒரே ஆண்டில் இரட்டிப்பாகி, 91 ஆயிரத்து, 818 கோடி ரூபாயை எட்டியுள்ளன. இது, மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வருவாய் வரவினங்கள்
கடந்த, 2008 - 09ம் ஆண்டில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த வருவாய் வரவினங்களின் வீதம், உச்ச நிலையாக, 13.35 சதவீதத்தை அடைந்தது. 2014 - 15ம் ஆண்டில், 11.41 சதவீதமாகி, 2020ல், 8.70 சதவீதமாக குறைந்துள்ளது. பின், 2018 - 19ம் ஆண்டில், முதல் முறையாக, தேசிய சராசரி அளவை விட, தமிழகத்தின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மொத்த வரி வருவாயின் விகிதம் குறைந்துள்ளது. இது, மிகவும் கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது.
மோசமான வரி நிர்வாகத்தினாலும், பெருமளவில் வரி செலுத்தாததை தடுக்க இயலாததாலும், மாநிலத்தின் முக்கிய வரி வருவாய் ஆதாரங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல, முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். 15 ஆண்டுகளாக, தமிழகத்தில் மோட்டார் வாகன வரி வீதங்கள் மாற்றப்படவில்லை.
வாகனங்களில் இருந்து கிடைக்கும் சராசரி வருவாய், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. அதேபோல நீண்ட காலமாக, மின்சார வரி சீரமைக்கப்படாமல் உள்ளது.
மத்திய வரிகளில் பங்கு
மத்திய வரிகளில், தமிழகத்திற்கான பங்கு, 10வது நிதிக்குழு காலத்தில், 6.63 சதவீதமாக இருந்தது. இது, 14வது நிதிக்குழு காலத்தில், 4.02 சதவீதமாக குறைந்தது. 15வது நிதிக்குழுவில், 4.07 சதவீதமாக சிறிதளவு உயர்ந்துள்ளது. நிதிக்குழுக்களிடம் இருந்து, தமிழகத்திற்கு நியாயமான பங்கை பெற, முந்தைய மாநில அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
மேலும், 2019 - 20ம் ஆண்டில், பெட்ரோல், டீசல் மீதான வரிகள் வாயிலாக, மத்திய அரசு, 2.39 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பெற்றது. ௨௦௨௦ல், 3.89 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது.
அதேநேரம், தமிழகத்திற்கு பகிர்ந்தளிக்கக் கூடிய வரிகள், 2019 - 20ம் ஆண்டில், 1,163.13 கோடி ரூபாயாக இருந்து, கடந்த ஆண்டு, 837.75 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
உள்ளாட்சி நிதி
உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், மத்திய நிதிக்குழுவிடம் இருந்து, உரிய மானியங்களை பெற இயலவில்லை. மின் வாரியம், குடிநீர் வாரியம் ஆகியவற்றுக்கு, மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களை, உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துவதில்லை.உள்ளாட்சிகளில் சொத்து வரி திருத்தம், கடைசியாக, 2008ல் மேற்கொள்ளப்பட்டது. நடப்பாண்டு சொத்து வரியில், குறைந்தபட்ச அடிப்படை விகிதத்தை நிர்ணயம் செய்து, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் மட்டுமே, 15வது ஒன்றிய நிதிக்குழுவின் மானியங்களை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பெற முடியும்.
பொதுத்துறை
பொதுத்துறை நிறுவனங்களின், மோசமான நிதி நிலைமை காரணமாக, அரசின் உத்தரவாதம் இல்லாமல், அவை கடன் பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாண்டு மார்ச், 31 நிலவரப்படி, மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறையில் உள்ள, பொதுத்துறை நிறுவனங்களின் ஒட்டுமொத்த கடன், 1.99 லட்சம் கோடி ரூபாய். குடிநீர் வழங்கலுக்கான, இரண்டு வாரியங்களின் ஒட்டுமொத்த இழப்பு, 5,282.57 கோடி ரூபாய்.
இழப்பு ஏன்?
மாநிலத்தின், அனைத்து போக்குவரத்து நிறுவனங்களின், சராசரி இயக்க செலவு, கிலோ மீட்டருக்கு, 96 ரூபாய், 75 காசு. இயக்கப்பட்ட கிலோ மீட்டருக்கு, 59 ரூபாய், 15 காசு இழப்பு ஏற்படுகிறது. மின்சாரம் வழங்குவதற்கான செலவு, ஒரு யூனிட்டுக்கு, ௯ ரூபாய், ௬ காசாக உள்ள நிலையில், சராசரி வசூல் ஒரு யூனிட்டுக்கு, ௬ ரூபாய், 70 காசாக உள்ளது. இதனால், ஒரு யூனிட்டுக்கு, ௨ ரூபாய், 36 காசு பற்றாக்குறை ஏற்படுகிறது.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இயக்கச் செலவு, கிலோ லிட்டருக்கு, 20 ரூபாய், 81 காசு. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில், 10 ரூபாய், 42 காசு, கிராமப்புற உள்ளாட்சிகளில், ௮ ரூபாய், 11 காசு குடிநீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தால், நிலையான செலவுகள் பெருமளவு அதிகரித்துள்ளன.
இது தான் தீர்வு
நிதி நெருக்கடியை எதிர்கொள்ள, போதிய நிதி ஆதாரங்கள் இல்லை. அதற்காக சீர்திருத்தத்தை, மேலும் தாமதப்படுத்த முடியாது. வழக்கமான அணுகுமுறையில், அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து அதிகரிக்கும் கடன் மற்றும் வட்டி செலவுகளில் இருந்து நாம் மீள முடியும். ஏழு ஆண்டுகளாக சரியான ஆளுகை இல்லாததால், தற்போதைய பிரச்னைகளை, நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. அரசியல் உள்நோக்கத்தை தவிர்ப்பதற்காக, நிதி நிலையின் சரிவிற்கான காரணங்களை, தெரிந்தே இந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த சரிவு சரி செய்யக் கூடியது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினசரி இழப்பு, வட்டி மற்றும் கடன்!
* போக்குவரத்து கழகங்களின் தினசரி இயக்க இழப்பு -ரூ.15 கோடி.
* மின் துறையில் தினசரி இயக்க செலவு -ரூ.55 கோடி.
* கடன்களின் தினசரி வட்டி செலவினம் - ரூ.115 கோடி .
* பொதுத்துறை நிறுவனங்களின் வட்டி மற்றும் இதர பொறுப்புகள் உட்பட, தினசரி வட்டி செலவினம் - ரூ.180 கோடி .
* ஒவ்வொரு குடிமகனின் ஆண்டு வாரியான வட்டி செலவு - ரூ.7,700.
*ஒவ்வொரு குடிமகன் மீது சுமத்தப்படும், அனைத்துகடன்கள் -ரூ.1.10 லட்சம்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE