மேட்டூர்,: மேட்டூர் அணையின் பாதுகாப்பு அரணாக விளங்கும் 16 கண் மதகு உபரி நீர் போக்கி, 90 வயதில் அடியெடுத்து வைத்துள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி; கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., 1925ல் அணை கட்டுமான பணி துவங்கி, 1934ல் முடிக்கப்பட்டது.
இருப்பு பாதை
அப்பணி நடக்கும்போதே வெள்ளம் வந்தால், கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அந்த நீரை வெளியேற்ற, 16 கண் மதகு கட்டுமானப் பணிதுவங்கியது. 400 மீ., நீளமுடைய உபரி நீர் போக்கியில், 16 மதகுகள் அமைக்கப்பட்டன.ஒவ்வொன்றிலும், 60 அடி நீளம், 20 அடி உயரம், 52.25 டன்னில் இரும்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷட்டர்களுக்கு தேவையான இரும்பு தகடுகளை, அப்போதைய ஆங்கிலேய அரசு, ஸ்காட்லாந்தில் தயாரித்து, கப்பல்
மூலம் இந்தியாவுக்கு எடுத்து வந்தது.
பின், ரயில் மூலம் மேட்டூர் அணைக்கு எடுத்து வரப்பட்டன. ஷட்டர்தகடுகள், கட்டுமான தளவாடங்கள் எடுத்து வரவே, சேலத்தில் இருந்து மேட்டூருக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு அரண்
ஷட்டர்கள் அனைத்தும்,'ரிவீட்' மூலம் இணைக்கப்பட்டன. மேட்டூர் அணை நிரம்பினால், 30 டி.எம்.சி., நீரை, இந்த ஷட்டர்களே தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு ஷட்டரும், 385 டன் அழுத்தத்தை தாங்கும் திறனுடையவை.அணை நிரம்பி, 126 அடியை எட்டினால், 16 கண் மதகு வழியாக அதிகபட்சம் வினாடிக்கு, 3.56 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்ற முடியும். 130 அடியாக உயர்ந்தால், 4.41 லட்சம் கன அடி உபரி நீரை வெளியேற்ற முடியும்.
அணை கட்டும் முன், 1924ல் காவிரியில் அதிகபட்சம் 4.56 லட்சம் கன அடி நீர் வந்துள்ளது.கட்டிய பின், 1961ல், 3.01 லட்சம் கன அடி நீர் வந்து உள்ளது; மதகில் அதிகபட்சம், 2.36 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1931 ஜூன் 20ல், 16 கண் மதகு கட்டி முடிக்கப்பட்டது.
இதை கட்டிய ஆங்கிலேய பொறியாளர், 'எல்லீஸ்' நினைவாக, 'எல்லீஸ் ஸாடல் சர்பிளஸ் கோர்ஸ்' என, மதகுக்கு பெயர் சூட்டப்பட்டது. வெள்ளப் பெருக்கில் உபரி நீரை வெளியேற்றி, மேட்டூர் அணையின் பாதுகாப்பு அரணாக விளங்கும், 16 கண் மதகுக்கு நடப்பாண்டு 90 வயதாகும் நிலையில், இன்னும் சிறந்த கட்டுமானத்துக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE