இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஆக 10, 2021 | Added : ஆக 10, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்குடிசைக்குள் புகுந்த லாரி 8 பேர் பரிதாப பலிஅமரேலி--குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் சாலையோர குடிசைக்குள் லாரி புகுந்ததில், இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து அமரேலி மாவட்டத்தின் ஜப்ராபாதிற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்றது. வழியில் அமரேலி மாவட்டம் பதடா கிராமம் அருகே சென்ற போது
இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்,


இந்திய நிகழ்வுகள்குடிசைக்குள் புகுந்த லாரி 8 பேர் பரிதாப பலி

அமரேலி--குஜராத்தின் அமரேலி மாவட்டத்தில் சாலையோர குடிசைக்குள் லாரி புகுந்ததில், இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக பலியாகினர்.

குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து அமரேலி மாவட்டத்தின் ஜப்ராபாதிற்கு நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி சென்றது. வழியில் அமரேலி மாவட்டம் பதடா கிராமம் அருகே சென்ற போது டிரைவர் துாங்கிய தால், சாலையோர குடிசைக்குள் லாரி புகுந்தது.இந்த விபத்தில், குடிசைக்குள் துாங்கிய இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். காயமடைந்த மேலும் இரு குழந்தைகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.டிரைவர் கைது செய்யப்பட்டார். பலியானோர் குடும்பத்தினருக்கு, மாநில அரசு தரப்பில் தலா ௪ லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.

பா.ஜ., நிர்வாகி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்-ஜம்மு - காஷ்மீரில் பா.ஜ., பிரமுகரும், அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் குல்காம் நகரை சேர்ந்தவர் குலாம் ரசூல்தார். பா.ஜ., விவசாய அணியின் மாவட்ட தலைவராக இருந்தார். இவரது மனைவி ஜாஹிரா பானு.நேற்று காலை, லஷ்கர்- இ - தொய்பா பயங்கரவாதிகள் இருவரையும் சுட்டுக் கொன்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெறுப்புணர்வு கோஷம் டில்லி போலீசார் வழக்கு

புதுடில்லி-டில்லி ஜன்தர் மந்தர் பகுதியில் நடந்த பேரணியில் வெறுப்புணர்வு கோஷம் எழுப்பியது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டில்லியில் ஜன்தர் மந்தர் பகுதியில் நேற்று முன்தினம் பாஜ., மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, நரசிங்கானந்த் சரஸ்வதி சுவாமி ஆகியோர் தலைமையில் சிறிய பேரணி நடந்தது. காலனி ஆதிக்க சட்டங்களை ஒழித்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நடந்த இந்த பேரணியில் சிலர், 'இந்தியாவில் வசித்தால் ஜெய் ஸ்ரீராம் சொல்ல வேண்டும்' என கோஷமிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர். நேற்று பார்லி.,யில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி தலைவர் ஆசாதுதின் ஒவைசி பேசியதாவது:பிரதமர் இல்லத்தில் இருந்து மிக அருகில் உள்ள ஜன்தர் மந்தரில், ஒரு மதத்தினருக்கு எதிராக வெறுப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை, டில்லி போலீசாருக்கு சமீபத்தில் வழங்கியுள்ளது. இருந்த போதிலும் யாரையும் கைது செய்யாமல் போலீசார் வேடிக்கை பார்த்துஉள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, ''பேரணி யில் வெறுப்புணர்வு கோஷம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்,'' என, அஸ்வினி உபாத்யாயா தெரிவித்துள்ளார்.


தமிழக நிகழ்வுகள்

ரூ.43 லட்சம் தங்கம் கோவையில் பறிமுதல்

கோவை-கோவை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட, 43 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து, 'ஏர் அரேபியா' விமானத்தில், நேற்று கோவை வந்த பயணியரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, விமானத்தில் வந்திறங்கிய ராமசாமி சேகர், தர்மா அருள் ஆகியோர் அணிந்திருந்த உள்ளாடையில் பேஸ்டால் ஒட்டப்பட்டு, 883 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு, 43 லட்சம் ரூபாய். இருவரையும் பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

ஜார்ஜ் பொன்னையாவுடன் கைதான ஸ்டீபன் மீது பலாத்கார வழக்குப்பதிவு

நாகர்கோவில்-ஹிந்து மதம் மற்றும் பிரதமர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பங்கேற்ற நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் மீது பாலியல் பலாத்காரம் உட்பட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

.கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து மதம், பாரதமாதா, பிரதமர் பற்றி இழிவாக பேசிய வழக்கில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருமனை கிறிஸ்தவ இயக்க தலைவர் ஸ்டீபன் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனு இரண்டு கோர்ட்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.குமரி மாவட்ட இளம்பெண் ஒருவர் ஸ்டீபன் உட்பட எட்டு பேர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்ததோடு, ஆடியோ ஒன்றையும் வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.கணவரை பிரிந்து வாழும் அந்தப்பெண் திருமண தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்தார். அதன் உரிமையாளரான ஜெபர்சன், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததோடு, அதனை வீடியோவாக பதிவு செய்தார்.

பிறகு நாகர்கோவில் என்.ஜி.ஓ., காலனி வீட்டில் அடைத்து வைத்து ஸ்டீபன் உட்பட பலர் பலாத்காரம் செய்துள்ளனர்.இது சம்பந்தமாக ஏப்ரலில் அந்தப்பெண் புகார் அளித்ததால் ஜெபர்சன் தற்கொலை செய்தார். ஆனால் செல்வாக்கு காரணமாக ஸ்டீபன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. தற்போது ஸ்டீபன் கைதாகியுள்ளதால் அந்த பெண் ஆன்லைன் மூலம் மீண்டும் புகார் அளித்துள்ளார். மார்த்தாண்டம் மகளிர் போலீசார் ஸ்டீபன், கபர்ஸ் ஜெபராஜ் உட்பட எட்டு பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsரூ.3.50 கோடி டெண்டரில் சண்டை; 'ஓப்பன்' ஆனது தி.மு.க., நிர்வாகி மண்டை

சிவகங்கை-சிவகங்கையில், குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்கான 3.50 கோடி ரூபாய் டெண்டர் ஏலத்தில், தி.மு.க.,வினர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், தி.மு.க., நிர்வாகியின் மண்டை உடைக்கப்பட்டது.சிவகங்கையில் குடிநீர் வாரிய பராமரிப்பு பணிகளுக்காக, தொண்டி ரோட்டில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் நேற்று டெண்டர் ஏலம் நடந்தது.மொத்தம், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், சிவகங்கை மாவட்ட கிராமப்புற குடிநீர் திட்ட பராமரிப்பில் 27 பணிகள், ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆறு பணிகளை டெண்டர் எடுக்க, ஒப்பந்ததாரர்கள் திரண்டனர்.

தி.மு.க., தரப்பினரும் பங்கு பெற்றனர்.டெண்டர் ஏலம் முடிந்து மாலை 4:00 மணிக்கு வெளியே வரும்போது, தி.மு.க., மாவட்ட துணைச் செயலர் சேங்கை மாறன், கோவானுார் பகுதியைச் சேர்ந்த தொகுதி அமைப்பாளர் சோமன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.சேங்கை மாறன் தரப்பு தாக்கியதில், சோமனுக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சோமன் தரப்பினர், சேங்கை மாறன் தரப்பினரின் காரை தாக்கினர். போலீசார் வந்ததும், அங்கிருந்து சென்றனர்.சோமன் கூறுகையில், ''என்னை கொல்லும்படி சேங்கை மாறன் தரப்பினர் கூறியதோடு, சேங்கை மாறனும் தாக்கினார்,'' என்றார்.

சூர்யா படம் பார்த்து கொள்ளை

ராணிப்பேட்டை-ஆற்காட்டில் போலியாக ஐ.டி., 'ரெய்டு' நடத்தி, 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், வருமான வரித்துறை ஊழியர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டைச் சேர்ந்தவர் கண்ணன், 50; பைனான்சியர். ஜூலை 30ல் இவரது வீட்டுக்கு 'இனோவா' காரில் ஒரு பெண் உள்ளிட்ட ஆறு பேர் வந்தனர். வருமான வரித் துறையில் இருந்து வருவதாக கூறி, வீட்டை சோதனை செய்து, 6 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றனர்.தன் வீட்டில் போலி ரெய்டு நடந்ததை அறிந்த கண்ணன், போலீசில் புகார் அளித்தார்.ஆற்காடு போலீசார் நேற்று கூறியதாவது:கண்ணமங்கலம் கூட்டு சாலையில், பிரியாணி கடை நடத்தி வரும் எழிலரசு, 40, கடந்தாண்டு கண்ணன் வீட்டில் குடியிருந்தார். அவர் ஏராளமாக பணம் வைத்துள்ளது தெரிந்ததால், கொள்ளையடிக்க திட்டமிட்டார்.இதற்காக நண்பர்களான ஆற்காடு பாரத், 44, சென்னையைச் சேர்ந்த மாது, 35, சையத் கலீல் துப்பா, 33, முபினா, 37, என்ற பெண் ஆகியோரை கூட்டு சேர்த்து, சென்னை வருமான வரி தலைமையிடத்தில் முதுநிலை உதவியாளராக பணியாற்றி வரும் ராமகிருஷ்ண யாதவ், 58 என்பவரிடம் ஐடியா கேட்டுள்ளனர்.அவரும், வருமான வரி அதிகாரிகள் போல நடித்து, பணத்தை கொள்ளை அடிப்பதற்கான பயிற்சியை கொடுத்து உள்ளார்.

இதற்காக சூர்யா நடித்த, தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை பார்த்து உள்ளனர். இதன்படி, கண்ணன் வீட்டுக்கு ஆறு பேரும் சென்று, 6 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்து உள்ளனர்.இதில், ராமகிருஷ்ண யாதவிற்கு 2 லட்சம் ரூபாய் கொடுத்து, மீதி பணத்தை மற்றவர்கள்சமமாக பிரித்து கொண்டனர்.ராமகிருஷ்ண யாதவ், எழிலரசு, பாரத், மாது, சையத் கலீல் துப்பா, முபினா கைது செய்யப்பட்டுள்ளனர். 4 லட்சம்ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேங்கைமாறன் கூறுகையில், ''டெண்டர் முடிந்து, மாலை 3:30 மணிக்கு அங்கிருந்து வெளியேறி விட்டேன். எனக்கும், இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை,'' என்றார்.குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஐனான் கூறுகையில், ''சிவகங்கை, ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பராமரிப்பில், 33 பணிகளுக்கான டெண்டர் நடந்தது. ''எந்த பிரச்னையும் ஏற்படாமல் டெண்டர் நிறைவு பெற்றது,'' என்றார்.

சிவகார்த்திகேயன் 'ஷூட்டிங்' 30 பேர் மீது வழக்கு

பொள்ளாச்சி-ஆனைமலையில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியதால், இயக்குனர் உட்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும், டான் படத்தின் ஷூட்டிங் நடந்தது. இதைக் காண நுாற்றுக்கணக்கான மக்கள், சமூக விலகலின்றி திரண்டனர். வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன், ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் ஆகியோர், படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர். விசாரணையில், அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, ஆனைமலை போலீசார், டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உட்பட 30 பேர் மீது வழக்கு பதிந்தனர். வருவாய்த் துறையினர், 19 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்தனர்.போலீசார் கூறுகையில், 'நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடக்கிறது' என்றனர்.

மூதாட்டியிடம்நகை பறிப்பு
கமுதி--கமுதியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி சரஸ்வதி 65, குண்டாறு அருகே வயல்வெளியில் கால்நடைகளை மேய்த்துகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மூதாட்டி கழுத்தை நெரித்து காதில் அணிந்துஇருந்த 8 கிராம் தோட்டை பறித்துச் சென்றார்.

கபடி வீரர் விபத்தில் பலி

பரமக்குடி--பரமக்குடி நகராட்சி காட்டுப்பரமக்குடி முருகவேல் மகன் கணேஷ்குமார், 21. இவர் நேற்று முன்தினம் இரவு பாம்புவிழுந்தானில் நடந்த கபடி போட்டியில் பங்கேற்க சென்றார். நான்கு வழிச்சாலையில் நண்பர்களுடன் நடந்து சென்றபோது, மதுரையில் இருந்து பரமக்குடிக்கு செம்பொன்குடியைச் சேர்ந்த நீதிராஜன் ஓட்டி வந்த டூவீலர், கணேஷ்குமார் மீது மோதியது. இதில் கணேஷ்குமார் பலியானார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வுகள்


latest tamil news


வேன் தீப்பிடித்து 10 பேர் பலி

லாகூர்-பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாயினர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நோக்கி 17 பயணியருடன் ஒரு வேன் சென்றது. பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா அருகே பின்னால் வந்த 'காஸ் டேங்கர்' லாரி, வேன் மீது மோதியது.இதனால் லாரியில் இருந்த காஸ் வெளியேறி வேனில் தீப்பற்றியது. இதில் வேனில் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் தீயில் கருகி பலியாயினர். பலத்த தீக்காயங்களுடன் ஏழு பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X