சென்னை--பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்த, 'ரோல்ஸ் ராய்ஸ்' காருக்கு, நடிகர் விஜய், 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளதாக, வணிக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டனில் இருந்து, 2012ல் நடிகர் விஜய், 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' காரை வாங்கியிருந்தார்.கார் வாகன பதிவுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றபோது, நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லா சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்தும் பட்சத்தில், சான்றிதழ் வழங்குவதாக வணிக வரி உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, விஜய் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.இந்த நிலையில், விஜய் நுழைவு வரியாக, 40 லட்சம் ரூபாய் வரை செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:இறக்குமதி காரை பதிவு செய்ய, நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீதும், ஆட்சேபனை இல்லா சான்றிதழும் அவசியம். இது, அனைத்து இறக்குமதி கார்களுக்கும் பொருந்தும். ஜி.எஸ்.டி., சட்டத்திற்கு முன், மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது, இறக்குமதி காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது அவசியம்.அதன்படி, நடிகர் விஜய் தன் காருக்கு, மொத்தம், 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி உள்ளார். முதலில், 8 லட்சம் ரூபாயும், தற்போது 32 லட்சம் ரூபாயும் செலுத்தி உள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE